பாரில் பெட்ரோல் குண்டு வீசிய போதை ஆசாமி கைது
அரும்பாக்கம்:'டாஸ்மாக்' அருகில் செயல்படும், தனியார் மதுக்கூடத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய போதை ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.அரும்பாக்கம் 100 அடி சாலையில், 'கடை எண்: 463' அரசு 'டாஸ்மாக்' கடை உள்ளது. இதன் அருகில், எஸ்.ஆர்., பார் என்ற பெயரில், தனியார் மதுக்கூடம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, இங்கு மது அருந்திய வாலிபர் ஒருவர், அதீத மதுபோதையில் மதுக்கூட வாசலிலேயே படுத்துள்ளார்.அங்கிருந்த ஊழியர்கள், வாலிபரை எழுப்பி விரட்டியதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கிருந்து சென்ற வாலிபர், சிறிது நேரம் கழித்து, காலி மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, குண்டு போல தயாரித்து கொண்டு வந்து, மதுக்கூடத்திற்குள் வீசிவிட்டு தப்பினார்.மதுக்கூட ஊழியர்கள் சிதறி ஓடினர். ஆனால் அந்த பெட்ரோல் குண்டு வெடிக்காமல் அணைந்தது.இதுகுறித்த புகாரை விசாரித்த அரும்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நள்ளிரவு அதே பகுதியில் போதையில் படுத்திருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், திருமுல்லைவாயிலைச் சேர்ந்த விஷ்ணு, 30, என்பதும், கடந்த சில ஆண்டுகளாக போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிந்தது.இதையடுத்து, அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.