அம்பத்துார், கொரட்டூர் அடுத்த பாடி, சத்யா நகரைச் சேர்ந்தவர் லோக சந்துரு; சென்னை உயர் நீதிமன்ற வக்கீல். இவரது மகன் சூர்யபிரகாஷ், 22, கோடம்பாக்கத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், இறுதியாண்டு படித்து வருகிறார்.ஜன.,10ம் தேதி, வீட்டு மாடியிலிருந்து கீழே இறங்கும் போது, கையில் இரும்பு கம்பி குத்தி, சூர்யபிரகாஷ் காயமடைந்தார். உடனே, அதே பகுதியிலுள்ள, 'ராஜம் நர்சிங் ஹோம்' மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது, செவிலியர் 'டிடி' ஊசி போட்டுள்ளார். அப்போது, ஊசியின் பெரும்பகுதி உடைந்து, உள்ளே சிக்கியுள்ளது. பின் மருத்துவர்கள், 'எக்ஸ்ரே' எடுக்கும்படி கூற, மருத்துவமனை ஊழியர்கள், அரை கி.மீ., துாரம் சூர்யபிரகாஷை நடக்க வைத்தே 'ஸ்கேன்' மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் ஊசி மேலும் உள்ளே இறங்கி, அவர் வலியால் துடித்துள்ளார்.தகவல் அறிந்த அவரது பெற்றோர், மருத்துவமனையின் அலட்சியத்தை கண்டித்தனர். அதன் பின், அண்ணா நகரிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில், சூர்யபிரகாஷிற்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, 7 செ.மீ., நீளமுள்ள ஊசியை அகற்றியுள்ளனர்.இது குறித்து லோக சந்துரு, 'ராஜம் நர்சிங் ஹோம்' மீது கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். ஆனால், நேற்று வரை போலீசார் விசாரணை நடத்தவில்லை. இதையடுத்து நேற்று காலை, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளித்துள்ளார்.