போரூரில் ரூ.1,800 கோடியில் புது ஐ.டி., பூங்கா அமைகிறது
சென்னை:சென்னையில், மவுன்ட் - பூந்தமல்லி சாலையில், 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தனியார் நிறுவனம் சார்பில், புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின் காரணமாக, பெரிய அளவிலான ஐ.டி., நிறுவனங்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தங்கள் வளாகங்களை அமைக்கின்றன. சென்னையில் மனிதவளம் அதிகம் என்பதுடன், கட்டமைப்பு வசதிகளும் பெருகி வருவதால், ஐ.டி., நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பழைய மாமல்லபுரம் சாலைக்கு அடுத்தபடியாக, மவுன்ட் - பூந்தமல்லி சாலையில், பெரிய அளவிலான ஐ.டி., பூங்காக்கள், அலுவலக வளாகங்கள் கட்டப் படுகின்றன. அந்த வகையில், மவுன்ட் - பூந்தமல்லி சாலையில், போரூர் அருகே, ஆர்.எம்.இசட்., நிறுவனம் சார்பில், ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களிடம், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, 1,800 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஐ.டி., பூங்கா அமைக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இங்கு, 10 மாடிகள் கொண்டதாக, மூன்று டவர்களில், 36 லட்சம் சதுர அடி பரப்பளவில், புதிய ஐ.டி., பூங்கா அமைய உள்ளது. இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டால், 28,725 பேர் பணிபுரியும் இடவசதி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதற்காக திட்ட அனுமதி கோரி, ஆர்.எஸ்.இசட்., நிறுவனம் சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.