ஏசிகளில் வெளியேறும் நீர் மறுபயன்பாடுக்கு புதிய திட்டம்
சென்னை, சென்னை மெட்ரோ ரயில் தலைமையக கட்டிடத்தில் 'ஏசி' இயந்திரத்தில் இருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து, மறுபயன்பாடு செய்யும் ஆலை திறக்கப்பட்டுள்ளது.சென்னை, நந்தனத்தில், 2022, அக்., 27 ல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக் கட்டடம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம், ஒரு அடித்தளம் மற்றும் 12 மாடிகளை கொண்டது. இந்தக் கட்டடம் முழுமையாக 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளது. 'ஏசி'யில் இருந்து வெளியாகும் நீரை சேகரித்து மறுபயன்பாடு செய்ய, நேற்று புதிய ஆலை திறக்கப்பட்டது. இதை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்திக் திறந்து வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன், நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:இந்த கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ள 'ஏசி' இயந்திரங்கள், மொத்தம் 1,750 டன் குளிரூட்டும் திறன் கொண்டவை. 'ஏசி' செயல்பாட்டின் போது, வெளியேறும் தண்ணீர், வடிகால் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பொதுவாக கழிவு நீராக வெளியேற்றப்படும்.தற்போது திக்கப்பட்டுள்ள ஆலையின் வாயிலாக, 'ஏசி'யில் வெளிவரும் தண்ணீரை சேகரித்து, தரை சுத்தம் செய்தல், கை கழுவுதல், கழிப்பறை பயன்பாடு போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தின் வாயிலாக தினமும் சராசரியாக 10,000 லிட்டர் நீர் பெறப்படும். இது, கட்டடத்தின் மொத்த தண்ணீர் பயன்பாட்டில், 25 சதவீதமாகும். இந்த ஆலை 1.5 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டுக்கு சராசரி 3,650 கிலோ லிட்டர் நீர் பெறப்பட்டு, ஆண்டுக்கு ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நீர் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.