செய்திகள் சில வரிகளில்
சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி பெருங்குடி: பெருங்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 61; ஆட்டோ ஓட்டுநர். நேற்று, ராஜிவ்காந்தி சாலை, இந்திரா நகரில் இருந்து திருவான்மியூர் நோக்கி வந்து, சாலையில் திரும்பி உள்ளார். அப்போது, கேளம்பாக்கத்தில் இருந்து அடையாறு, மத்திய கைலாஷ் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், ஆட்டோ நொறுங்கி, ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர். கணவருடன் தகராறு மனைவி தற்கொலை திருநின்றவூர்: திருநின்றவூர், கவரப்பாளையத்தை சேர்ந்தவர் கருணாகரன், 55. கோவிலுக்கு செல்வது தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், அவரது மனைவி செல்வி, 52, மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர். பெண்ணை கத்தியால்வெட்டிய மூவர் கைது அயனாவரம்: அயனாவரம் வீராசாமி 2வது தெருவைச் சேர்ந்தவர் தேவநிதி, 43. இவரது கணவர் ஜான் நெப்போலியன், 48; இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். வீடு, மனை வாங்கித் தருவது தொடர்பாக, வில்லிவாக்கத்தை சேர்ந்த மீனாவுடன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. இதனால், நெப்போலியனின் வீட்டிற்குள் புகுந்த, மீனாவின் மருமகன் சந்தோஷ் உள்ளிட்டோர், நெப்போலியன் மனைவி தேவநிதியை கத்தியால் வெட்டி விட்டு தப்பினர். அயனாவரம் போலீசார் விசாரித்து, சந்தோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கவேல், 27, கார்த்திக், 27 ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர். பங்குச்சந்தை நஷ்டம் பெண் தற்கொலை பல்லாவரம்: பொழிச்சலுார், ஞானமணி நகரை சேர்ந்த வனஜா, 38, என்பவர், ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என நம்பி, 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். அந்த பணம் முழுதும் நஷ்டம் அடைந்ததால் விரக்தியில் இருந்த வனஜா, நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். 'வாட்ஸாப்' மூலம் சரக்கு விற்பனை செங்குன்றம்: டாஸ்மாக் விடுமுறை தினமான நேற்று, செங்குன்றம், விளாங்காட்டுபாக்கம் சுற்றுவட்டாரங்களில், கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக இருந்தது. முன்தினமே வாங்கி இருப்பு வைக்கப்பட்ட குவார்ட்டர் பாட்டில்கள் குறித்து, வாட்ஸாப் மூலம் நண்பர்களுக்கு தகவல் பகிர்ந்து, மது வகைகள் விற்கப்பட்டன. கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர், 2வது தெருவில் கள்ள சந்தையில் மது பாட்டில் விற்ற, வண்ணாரப்பேட்டை, எம்.எஸ்.நாயுடு தெருவை சேர்ந்த கீதா, 43, கைது செய்யப்பட்டார். கஞ்சா விற்பனை ஏழு பேர் கைது ஆலந்துார்: ஆலந்துார் எம்.கே.என்., சாலையில் கண்காணிப்பில் இருந்த போலீசார், நேற்று முன்தினம் அப்பகுதியில் சுற்றிய, 17 வயது சிறுவன் வைத்திருந்த பையில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவன் அளித்த தகவலின்படி, சிவகங்கையை சேர்ந்த சரவணன், 40, பிரகாஷ், 22, அந்தமான் - நிக்கோபார் தீவை சேர்ந்த லட்சுமணன், 19, திருச்சியை சேர்ந்த ஆனந்த்குமார், 32, கணேஷ், 28, அசோக்குமார், 26, ஆகியோரை, பல்வேறு பகுதிகளுக்கு சென்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.