செய்திகள் சில வரிகளில்...
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், நேற்று காலை நேரு பஜார் சாலையில் இருந்து சி.டி.எச்., சாலை செல்வதற்கு தண்டவாளத்தை கடந்த போது, அரக்கோணம் நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். காசிமேடில் தீக்கிரையான குடிசை காசிமேடு, வேடர்பரி மைதானம் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள், 56; வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் பேரன் சூர்யாவுடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை, குடிசை வீடு தீப்பற்றியது. இந்த விபத்தில், வீட்டில் இருந்த துணிகள், பொருள்கள் எரிந்து நாசமானது. வீட்டின் வெளியே படுத்திருந்ததால் பாட்டியும் பேரனும் தப்பினர். காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர். பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் ஆவடி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லையில், தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற, கடந்தாண்டு ஆன்லைன் சேவை துவங்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் www.tnesevai.tn.gov .inஎன்ற இணையதளம் வாயிலாக அக்., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிப்பறி திருடனுக்கு சிறை பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் சேவியர், 47. இவரது கடை அருகே ரவுடி ஒருவர் மது போதையில் பொதுமக்களிடமும், கடைக்காரர்களிடமும் தகராறு செய்து, பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து சேவியர் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்த, செம்பியம் போலீசார் நேற்று வழிப்பறியில் ஈடுபட்ட செங்குன்றத்தை சேர்ந்த சார்லஸ், 23 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.