உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழைய ஓய்வூதிய திட்டம் மனுவை பரிசீலிக்க உத்தரவு

பழைய ஓய்வூதிய திட்டம் மனுவை பரிசீலிக்க உத்தரவு

சென்னை:மின் ஊழியர் அளித்த விண்ணப்பித்தை பரிசீலித்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக எட்டு வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்க மின்வாரிய தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரை சேர்ந்த ஜி.நாகராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:என் தந்தை, தமிழக மின்வாரியத்தில் பணிபுரிந்தார். பணியில் இருந்தபோது, 1994ல் இறந்து விட்டார். அப்போது, பள்ளியில் படித்து கொண்டிருந்த நான், கருணை அடிப்படையில் பணிக்கு விண்ணப்பம் செய்தேன். விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும்போது, எம்.டெக்., படித்து முடித்து விட்டேன். இந்நிலையில், கருணை அடிப்படையில் எனக்கு உதவி என்ஜினீயர் பதவி வழங்கி, 2003, ஏப்.30ல் தலைமை இன்ஜினியர் உத்தரவு பிறப்பித்தார். உடனே நான் பணியில் சேர்ந்தேன்.இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து, 2003 ஆக.,6ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவும், இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, 2003 ஏப்.,1ல் அமல்படுத்துவதாக கூறியிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, பண பலன்கள் தொடர்பான உத்தரவை முன்தேதியிட்டு உத்தரவிட முடியாது.எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தில், என் பெயரை சேர்க்கும்படி கடந்த 1ல் அரசுக்கு மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.காசிநாதபாரதி ஆஜரானார். இதையடுத்து, 'மனுதாரர், கடந்த 1ல் வழங்கிய கோரிக்கை மனுவை, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பரிசீலித்து எட்டு வாரத்திற்குள் தமிழக மின்வாரிய தலைவர் இறுதி முடிவை எடுக்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ