உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகரில் விதிமீறிய கட்டடங்களை இடித்து அகற்ற உத்தரவு கண்டிப்பு! பெரும் முதலீடு என்பதற்காக இரக்கம், கருணை கூடாது

தி.நகரில் விதிமீறிய கட்டடங்களை இடித்து அகற்ற உத்தரவு கண்டிப்பு! பெரும் முதலீடு என்பதற்காக இரக்கம், கருணை கூடாது

சென்னை : தி.நகரில் விதிமீறி கட்டப்பட்ட எட்டு மாடி கட்டடத்தை, எட்டு வாரங்களில் இடிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'பெரும்முதலீடு என்பதற்காக வீதிமீறல்கள் செய்தோர் மீது இரக்கம், கருணை காட்டக் கூடாது' என, தெளிவுபடுத்திய நீதிமன்றம், 'சட்ட விரோதமாக கட்டப்பட்ட மற்ற கட்டடங்கள் மீது, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கண்டிப்புடன் கூறியுள்ளது.சென்னை, தி.நகர் பாண்டிபஜாரில், தரைத்தளம் மற்றும்மூன்று தளங்களுடன் கூடிய வணிக கட்டடம் கட்டுவதற்கு, பெங்களூரைச் சேர்ந்த, 'ஜன்ப்ரியா பில்டர்ஸ்' என்ற நிறுவனம், 1990 பிப்., 9ல் அனுமதி பெற்றது. ஆனால், அனுமதியை மீறி, 10 தளங்கள் வரை கட்டடம் கட்டி உள்ளது.

மனு தள்ளுபடி

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை வரன்முறை செய்யக்கோரி, சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம், அந்நிறுவனம் விண்ணப்பம் செய்தது. இந்த விண்ணப்பத்தை, சி.எம்.டி.ஏ., 2007 பிப்., 9ல் நிராகரித்தது.கட்டுமான நிறுவனம்தரப்பில், இரண்டாவது முறையாக, 2014ல் தாக்கல் செய்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசிடம் மேல் முறையீடு செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, கட்டடத்திற்கு, 'சீல்' வைத்த சி.எம்.டி.ஏ., நிர்வாகம், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை இடிப்பது தொடர்பாக, 2023 நவ., 28ல், 'நோட்டீஸ்' அனுப்பியது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கட்டுமான நிறுவனம் தரப்பில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சி.எம்.டி.ஏ., சார்பில் வழக்கறிஞர் ஆர்.சிவகுமார், மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் ஏ.அருண்பாபு ஆகியோர் ஆஜராகினர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என்பதை, முழு உரிமையாக கோர முடியாது. இது, சிறப்பு திட்டங்கள் வாயிலாக ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் சலுகை.அனுமதியில்லாத கட்டுமானத்தை வரன்முறை செய்ய மறுத்து, சி.எம்.டி.ஏ., மற்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அவற்றை எதிர்த்து வழக்கு தொடராத கட்டுமான நிறுவனம், கட்டுமானத்தை இடிக்க எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அச்சுறுத்தல்

சட்ட விரோத கட்டுமானங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.இந்த கட்டடங்களால், சாலையை பயன்படுத்தும்நபர்களும் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற, அனைத்து சட்டவிரோத கட்டுமானங்கள் மீது, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக, அரசு மேற்கொள்ளக்கூடாது. ஒருபுறம் கட்டட திட்ட அனுமதியை வலியுறுத்தும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்ய கோரும் விண்ணப்பங்களை ஏற்கின்றனர். இது, சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்குவதாக அமைகிறது.அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் எதுவும் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து, எந்தவொரு நபரிடமிருந்தும் தகவல் அல்லது புகாரை பெற்றவுடன், உடனே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை துவங்க வேண்டும். பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக, விதிமீறியவர்களுக்கு இரக்கம், கருணை காட்டக்கூடாது.

சட்டவிரோத செயல்

நடவடிக்கைகளின் பிடியிலிருந்து தப்பிக்க முடியும் அல்லது வரன்முறைப்படுத்தல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதன் வாயிலாக அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை இடிப்பதைத் தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன், கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், மக்களை பணயம் வைத்து, இதுபோன்ற சட்டவிரோத செயல்களை செய்ய துணிகின்றனர்.கட்டட திட்ட அனுமதி வழங்குதல், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடிப்பது தொடர்பான விஷயத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் சட்டமாகி உள்ளன.கட்டடத் திட்ட அனுமதி நடவடிக்கைகள் போன்ற பல்வேறு சட்டங்களின் விதிகளின் கீழ், சி.எம்.டி.ஏ., - சென்னை மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள், அவற்றை பின்பற்ற வேண்டும்.எட்டு வாரங்களில், அனுமதியில்லாமல் கட்டப்பட்ட தளங்களை இடிக்க, சி.எம்.டி.ஏ., மற்றும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராஜ்
பிப் 19, 2025 11:06

இருப்பதிலேயே மிகச் சிறந்த ஊழல் துறை சி எம் டி ஏ. அடுத்தது வணிகவரித்துறை அடுத்தது RTO லஞ்சம் கொடுக்காமல் லைசென்ஸ் வாங்க முடியாது புதுப்பிக்க முடியாது இரவு 11 மணி வரை ஆர்டிஓ ஆபீஸ் இல் அலுவலர்கள் வேலை செய்து கொண்டுள்ளனர் இன்றைய தினம் எவ்வளவு மேல் வருமானம் என்பதை கணக்கிட்டு எல்லோருக்கும் வங்கியீடு செய்து கொடுப்பர் அவ்வளவு சின்சியராக வேலை செய்து கொண்டிருப்பர். எல்லாவற்றிக்கும் மேலாக பதிவுத்துறை அங்கே நடக்கும் அக்கிரமங்கள் உலகில் எங்கேயும் இல்லை. இப்படி எல்லா துறைகளும் போட்டி போட்டுக் கொண்டு சம்பாதிக்கின்றனர். சிஎம்டிஏ அதிகாரிகளின் தலைவர் சேகர் பாபு தினம்தோறும் கோடிக்கணக்கில் வருமானம்.


ராஜ்
பிப் 19, 2025 08:02

1990 இல் திமுக ஆட்சி 1991 முதல் 96 வரை ஜெயலலிதா ஆட்சி 96 முதல் 2001 வரை கலைஞர் ஆட்சி 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா ஆட்சி 2006 முதல் 2011 வரை கலைஞர் ஆட்சி 2011 முதல் 2021 வரை அண்ணா திமுக ஆட்சி அதன் பிறகு தற்போது திமுக ஆட்சி. மக்களே புரிந்து கொள்ளுங்கள். இரண்டு ஆட்சியிலும் சிஎம்டிஏ லஞ்சம் வாங்கிக் கொண்டு விதிமுறை கட்டிடம் கட்டும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. லஞ்சம் வாங்கியவர்களை கண்டுபிடித்து ஜெயிலில் செல்ல வேண்டும் விதி மீறி கட்டிடம் கட்டும்போது சிஎம்டிஏவுக்கு தெரியவில்லையா அப்போ ஏன் தடுத்து நிறுத்தவில்லை.


ஸ்டார்
பிப் 19, 2025 07:32

ஹி.ஹி... மேல் கோர்ட்டுக்குப்.போய் ஸ்டே வாங்கிடுவம்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை