பாஸ்போர்ட் விசாரணைக்கு பணம் பெற்ற ஏட்டு கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
விருகம்பாக்கம்,தி.நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் தலைமை காவலர் குகன். இவர், விருகம்பாக்கம் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவில் பணிபுரிகிறார்.இந்நிலையில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பெண், மூன்று மாதங்களுக்கு முன், வெளிநாடு செல்ல 'தட்கல்' முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்தார்.அதை விசாரிக்க சென்ற குகன், பலமுறை அலைக்கழித்ததோடு அப்பெண்ணிடம் 5,000 ரூபாய் லஞ்சம் பெற்றார். இதுகுறித்து அப்பெண், மாநகர போலீஸ் கமிஷனருக்கு 'ஆன்லைன்' வாயிலாக புகார் அளித்தார்.இந்த புகார் குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். இதில், பாஸ்போர்ட் விண்ணப்பிப்போரிடம் கள ஆய்வு செய்து 2,000 முதல் 5,000 ரூபாய் வரை வசூல் செய்தது தெரியவந்தது.இதனால், விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையில், பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் அதிகளவில் கிடப்பில் போடப்பட்டதும் தெரியவந்தது.இதையடுத்து, நுண்ணறிவு பிரிவு காவலர் குகனை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்ற, கமிஷனர் அருண் உத்தரவிட்டார். மேலும், கோயம்பேடு காவல் நிலைய இரண்டாம் நிலை நுண்ணறிவு பிரிவு போலீஸ் இசக்கி முத்துக்குமார், கடந்த மாதம் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாகவும், குகனிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.