உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட்டை சுற்றி குப்பையை குவிக்கும் ஊராட்சிகள்... விமானங்களுக்கு ஆபத்து! : இரைதேடும் பறவைகள் மோதலால் விபத்து அபாயம்; அட்டூழியத்தை தடுக்க கடிவாளம் போடுமா அரசு?

ஏர்போர்ட்டை சுற்றி குப்பையை குவிக்கும் ஊராட்சிகள்... விமானங்களுக்கு ஆபத்து! : இரைதேடும் பறவைகள் மோதலால் விபத்து அபாயம்; அட்டூழியத்தை தடுக்க கடிவாளம் போடுமா அரசு?

சென்னை விமான நிலையத்தை சுற்றிய காலி இடங்களில், சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊராட்சிகள் கட்டுப்பாடின்றி குப்பையை கொட்டி வருவதால், இரை தேடி பறவைகள் குவிகின்றன. இவற்றால், விமானங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விமான இன்ஜினில் பறவை மோதியதால், ஏர் ஏசியா உள்ளிட்ட விமானங்கள் பறக்க முடியாமல் தரையிறங்கிய சம்பவங்களும் நடந்துள்னள. விபரீதம் நடக்கும் முன், தமிழக அரசும், விமான நிலைய ஆணையமும் ஒருங்கிணைந்து, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் சென்னை விமான நிலையம் மூன்று முனையங்களுடன் செயல்பட்டு வருகிறது. விமான நிலையத்தையொட்டி, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் வழியே அடையாறு ஆறு செல்கிறது. சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியும், இதன் பின்புறம் அமைந்துள்ளது.

இறைச்சி கழிவு

இந்த மூன்று ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள், அடையாறு ஆற்றின் கரையோரம் மற்றும் ஊராட்சிகளில் உள்ள காலி நிலத்தில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. பிளாஸ்டிக், மாமிச கழிவுகள், எலி, நாய், பூனை உள்ளிட்ட இறந்த உயிரினங்களின் உடல் வீசப்படுகின்றன. இவை, ஆங்காங்கே மலை போல் குவிந்துள்ளன. இந்த குப்பையில் உணவு தேடி, பருந்து உள்ளிட்ட பறவைகள் வானத்தில் வட்டமடிக்கின்றன. இதற்கிடையில், கடந்த அக்.,25ல், சென்னையில் இருந்து மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு, இரவு 11:50 மணிக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் இன்ஜின் பகுதியில் பறவை நுழைந்ததால், பறக்க முடியாமல் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு, பயணியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள், அவ்வப்போது நடக்கின்றன. இந்நிலையில், மீண்டும் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள ஊராட்களில், குப்பை கொட்டும் சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதே நிலை நீடித்தால், பெரும் விமான விபத்து தவிர்க்க முடியாததாகும் என்கின்றனர் விமான போக்குவரத்து வல்லுநர்கள். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: திறந்தவெளியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், அது பறவைகளை ஈர்ப்பதன் காரணமாக, விமான விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நாட்டில் விமான நிலையத்தின், 10 கி.மீ., சுற்றளவில் திறந்தவெளி குப்பை கிடங்குகள் செயல்படுத்தக்கூடாது என, விமான நிலைய ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனாலும், சென்னை விமான நிலையத்தின் 10 கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ள குன்றத்துார் அருகே கொளப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம், திருமுடிவாக்கம், குன்றத்துார் ஆகிய பகுதிகளில், பல இடங்களில் குப்பை கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன.

விமான ஆணையம்

ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள், லாரிகள் மூலம், செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூரில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல், அடையாறு ஆறு கரையோரம் கொட்டப்படுகின்றன. விமான நிலையத்தின் ஓடுபாதை மிக அருகில் இருப்பது தெரிந்தும், குப்பை கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது. ஒருவேளை, திட்டமிட்டு குப்பை கொட்டப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்படுவதால், தமிழக அரசும், விமான நிலைய ஆணையமும் இணைந்து, குப்பை கழிவுகளால் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மாதத்திற்கு ஒரு கடிதம் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு, மாதம் ஒரு முறையாவது, குப்பை கொட்டுவதை கட்டுப்படுத்தக்கோரி கடிதம் எழுதுகிறோம். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனையும் நடத்துகிறோம். எத்தனை முறை இந்த பிரச்சனையை பற்றி கூப்பாடு போட்டாலும், யாரும் கண்டுகொள்வதில்லை. மாறாக, குப்பை கொட்டும் இடங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசு உயர் அதிகாரிகள் தலையிட்டால் மட்டுமே, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். குப்பை கொட்ட இடம் ஒதுக்கணும் குன்றத்துார் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, தினமும் முறையாக சேகரிக்கிறோம். விமானம் நிலையம் உள்ளதால், திறந்தவெளி நிலத்தில் அவற்றை கொட்டி அழிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எங்கள் ஊராட்சியில் இருந்து குப்பை கழிவுகளை, லாரிகளில் ஒரு லோடு எடுத்துச் சென்று, செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் குப்பை கிடங்கில் கொட்ட, 2,500 ரூபாய் கேட்கின்றனர். லாரி வாடகை, 10,000 ரூபாய் வரை செலவாகிறது. தினமும், 3 முதல் 5 லோடு குப்பை கழிவுகள் சேகரமாகும் நிலையில், இவ்வளவு பணம் செலவழித்து, எங்களால் எப்படி குப்பையை தினமும் ஆப்பூருக்கு எடுத்து செல்ல முடியும். ஊராட்சிகளுக்கு சற்று தொலைவில், குப்பை கொட்டுவதற்கென தனி இடத்தை, மாவட்ட நிர்வாகம் ஒதுக்கித் தந்தால் பிரச்னை தீரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ