பிள்ளைகளின் காதலை ஏற்ற பெற்றோர் குழந்தையுடன் கைகோர்த்த காதலர்கள்
சென்னை, போலீசாரின் முயற்சி காரணமாக, இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால், கல்லுாரி மாணவியும், காதலனும் குழந்தையை கொஞ்சி விளையாடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த பிரவீன், 21; சேலத்தைச் சேர்ந்த, 21 வயது மாணவியும் காதலர்கள். மாணவி, சென்னை பல்கலை யிலும், பிரவீன் டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றார். இருவரும், அலைபாயுதே பட பாணியில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். கோட்டூர்புரத்தில் உள்ள, கல்லுாரி விடுதியில் தங்கி இருந்த மாணவிக்கு, நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை, கீழே கிடந்ததாக ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் பிரவீன் ஒப்படைக்க முயன்றார். திருவல்லிக்கேணி போலீசாரின் விசாரணையில், குழந்தையின் தந்தையே அவர் தான் என, தெரியவந்தது. இதையடுத்து, திருவல்லிக்கேணி தனியார் விடுதியில் தங்கி இருந்த மாணவியை, போலீசார் மீட்டு குழந்தையுடன் கஸ்துாரிபாய் தாய் சேய் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் நலமுடன் உள்ளனர். மாணவி குழந்தை பெற்ற விவகாரம் குறித்து இருவரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னைக்கு வந்த அவர்களுக்கு, போலீசார் கவுன்சிலிங் அளித்தனர். இதையடுத்து, மாணவியை மருமகளாக ஏற்க பிரவீன் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மழலை செல்வமும் இருவரது பெற்றோரின் மனதை மற்றியது. இதனால், அனைவரும் குழந்தையை கொஞ்சி விளையாடினர். குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதாக, கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளனர். இருந்தாலும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தையை பெற்றோர் கைவிடும்பட்சத்தில், அது குற்றமாக கருதப்படும். மேலும், குழந்தையின் மரணத்திற்கு இது வழி வகுக்கும் என்பதால், கொலை அல்லது மரணம் விளைவிக்கும் குற்றமாக கருதப்படும் எனவே, பிரவீன் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.