ஏர்போர்ட் லவுஞ்ச் பகுதியில் பயணியர் அவமதிப்பு * டி.எப்.எஸ்., நிறுவனம் மீது தொடர் புகார்
சென்னை, சென்னை விமான நிலைய, 'லவுஞ்ச்' பகுதியில், பயணியருக்கு அனுமதி மறுக்கப்படுதாகவும், ஒப்பந்த நிறுவனம் முறையாக சேவை வழங்கவில்லை புகார் எழுந்துள்ளது.விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை முடித்த பயணியர் கட்டணம் செலுத்தி, 'லவுஞ்ச்' பகுதியில் ஓய்வெடுப்பது வழக்கம். விமான நிலைய உணவகங்களின் உணவின் விலை அதிகம் என்பதால், பலர் தங்கள் டெபிட், கிரிரெட் கார்டுகளை பயன்படுத்தி, சிறிய தொகை செலுத்தி, லவுஞ்ச்சில் சாப்பிடுவது வழக்கம்.இந்த, 'லவுஞ்ச்' பகுதியில் சவுகரியமாக ஒய்வெடுக்க இருக்கைகள், சைவ மற்றும் அசைவ உணவு வகைகள், இலவச வைபை, செய்தித்தாள்கள், விமானங்கள் வருகை புறப்பாடு குறித்த தகவல்கள்களை தரும், 'டிவி' உள்ளிட்ட பல வசதிகள் இருக்கும். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் லவுஞ்ச் பகுதியை, டி.எப்.எஸ்., என்ற தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. பயணியர் முறையான டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருந்தாலும் அனுமதி மறுப்பதாக பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து, பயணி ஒருவர் கூறியதாவது:சென்னை விமான நிலையத்தின், 'டி1' டெர்மினலில் உள்ள டி.எப்.எஸ்., லவுஞ் பகுதி நுழைவுக்காக, 2,200 ரூபாய் பணம் செலுத்தினேன். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் தவறான காரணங்களை முன்வைத்து, என்னை அனுமதிக்க மறுத்தனர். இது, பயணியர் மீதான அவமதிப்பு. என் வங்கியில் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளும் வசதி இருந்தும் புறக்கணிப்பது நியாயமற்றது.இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு பயணி சமூக வலைதளத்தில், 'லவுஞ்சில் உள்ள உணவின் தரம் மிக மோசமாக இருந்தது. அங்கு சாப்பிட வைக்கப்பட்டிருந்த பழங்கள் சுத்தமாக இல்லை. அடிப்படை உணவுப் பொருட்கள் கூட அங்கு இல்லை. இவற்றை எதற்காக நிர்வகிக்க வேண்டும். இவர்களுடனான ஒப்பந்தத்தை அதிகாரிகள் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். பயணியர் தரமான சேவையை எதிர்பார்க்கும்போது, இவ்வாறு மோசமான அனுபவம் ஏற்படுவது என்பது கவலைக்கிடமானது. விமான நிலைய ஆணைய அதிகாரிகள் இதற்கு தீர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.''சமூக வலைதளங்களில் பயணியர் பதிவுடும் புகார்கள் குறித்த, உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். உணவின் தரம் மற்றும் உணவகங்களில் சேவையில் பிரச்சனைகள் இருந்தாலும், சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்துகிறோம். லவுஞ்ச் பகுதியில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து, டி.எப்.எஸ்., நிறுவனத்திடம் தெரிவிக்கப்படும்.- சென்னை ஏர்போர்ட் அதிகாிகள்.