தரமணி 200 அடி சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு யு - டர்ன் அமைக்க முடியாமல் திணறும் போலீஸ்
தரமணி: தரமணி 200 அடி சாலையில், ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் 'யு - டர்ன்' அமைக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். தரமணி 200 அடி சாலை, 3.5 கி.மீ., துாரம் கொண்டது. மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லுார், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., நோக்கி செல்ல, 200 அடி சாலையை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும், ஐ.டி., ஊழியர்கள், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். வேளச்சேரி ரயில்வே சாலை முழு பயன்பாட்டுக்கு வந்ததால், அந்த சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளும், 200 அடி சாலையை பயன்படுத்துகின்றனர். அதிசயம் இதனால், 200 அடி சாலையில் எப்போதும் நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும், 'பீக் ஹவர்' நேரத்தில், தினமும் ஒரு கி.மீ., துாரம் வரை நெரிசல் அதிகரிக்கிறது. இதற்கு காரணம், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள். அந்த ஆக்கிரமிப்புகளால், தரமணி பகுதியில், 100, 120 அடியாக அகலம் குறைந்துள்ளது. ஓ.எம்.ஆர்., அண்ணா சாலை உள்ளிட்ட அகலம் அதிகமான சாலைகளில், நெரிசலை குறைக்க 'யு - டர்ன்' அமைக்கப்படுகிறது. அதுபோல், இந்த சாலையிலும் அமைத்தால் தான் நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். இதற்கு, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் கூறியதாவது: தரமணியில், 1 கி.மீ., துா ரத்தை கடக்க, 20 நிமிடம் வரை ஆகிறது. நுாறடி சாலைகளில் 'யு - டர்ன்' அமைத்து நெரிசலை தடுக்கும்போது, 200 அடி சாலையில் 'யு - டர்ன்' அமைக்க முடியாதது அதிசயம் தான். கள ஆய்வு செய்ய வரும் கீழ் அதிகாரிகளை, அரசியல்வாதிகள் மிரட்டுகின்றனர். அதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். போலீசார் கூறியதாவது: தரமணி ரவுண்டானாவில் இருந்து, கிழக்கு திசையில் 'யு - டர்ன்' அமைத்துள்ளோம். அதேபோல், மேற்கு திசையில் 'யு - டர்ன்' அமைத்தால், சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியும். நிதி ஒதுக்கவில்லை இதற்கு, சாலையின் அகலத்திற்கு ஏற்ப மைய தடுப்பை மாற்றி அமைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., சாலையில் இருந்து, ஓ.எம்.ஆர்., நோக்கி செல்லும் வாகனங்கள், யு - டர்னில் திரும்பும் வகையில் சாலை அகலமாக இல்லை. அதேபோல், தரமணியில் இலகுவான நடைமேம்பாலம் அமைப்பதுடன், சாலையின் பெரும்பாலான பகுதியையும் ஆக்கிரமித்து கட்டிய வடிகால்வாயை சாலையோரத்திற்கு மாற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் செய்தால், நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லும். இவ்வாறு அவர்கள் கூறினர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அகலத்தை கணக்கிட்டு மைய பகுதியை மாற்றி அமைக்க, எங்கள் துறையில் நிதி ஒதுக்கவில்லை. மணல், ஜல்லி, மர வகைகளை குவித்து வைத்திருப்பவர்கள், சாலைக்கு இடையூறாக இருக்கின்றனர். அகற்றக் கூறினால், உள்ளூர் அரசியல்வாதிகள் பெயரைக்கூறி மிரட்டுகின்றனர்,” என்றனர்.