215 சாலைகளில் விபத்து அபாயம் அரசிடம் அறிக்கை தந்த போலீசார்
சென்னை: மாநகராட்சி, மின்வாரிய பணிகளால், 215 சாலைகள் பழுதடைந்து, விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளதாக, அரசிடம் காவல் துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. சில மணி நேரம் மழை பெய்தாலே, சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் பல மணி நேரம், ஒரே இடத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. இதற்கிடையே, சென்னை, ஆவடி, தாம்பரம் கமிஷனர் அலுவலகங்களின் கீழ் பணிபுரியும் போக்குவரத்து போலீசார், தங்கள் பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், அதனால் விபத்துகள் ஏற்படும் ஆபத்து குறித்தும் குறிப்பிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியும், மின் வாரியமும் பணிகளை நிறைவு செய்யாதது குறித்தும், படங்களுடன் புகார் தெரிவித்து உள்ளனர். அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் பள்ளம் தோண்டும் பணிகளால், 215 சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மின்வாரியம் சார்பில், 101 இடங்களில் மின் கம்பங்கள் நட குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அவற்றை மூட வலியுறுத்தியும், இன்னும் சரி செய்யப்படவில்லை. வடகிழக்கு பருவ மழை துவங்கும் நிலையில், சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.