ஹெல்மெட் அணியாத வாலிபரின் முகத்தில் போலீசார் கும்மாங்குத்து
அம்பத்துார்:அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே, சிங்கப்பூர் ஷாப்பிங் சந்திப்பில், போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் நேற்று மதியம் ஈடுபட்டிருந்தார்.அப்போது, 'டி.வி.எஸ்., செஸ்ட்' ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு வாலிபர்களை, போக்குவரத்து காவலர் ஒருவர் மடக்கி பிடித்தார்.அப்போது, வாலிபர்களுடன் வாக்குவாதம் செய்த காவலர், ஸ்கூட்டியை ஓட்டி வந்த வாலிபரை மது போதையில் வாகனம் ஓட்டுவதாக நினைத்து ஊத சொல்லியுள்ளார். தொடர்ந்து வாலிபரின் கன்னம், காது, முகத்தில் கையால் அடித்ததோடு, தாறுமாறாக குத்தியுள்ளார். இதற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அம்பத்துார் போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீர்செய்வதில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக, வசூல் செய்து, தங்களது இலக்கை முடிப்பதில் கவனமாக இருக்கின்றனர்.ஆவடி கமிஷனர் வருகையின்போது மட்டுமே, போக்குவரத்து காவலர்கள் பணியில் உள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதியவோ, அபராதம் விதிக்கவோ மட்டுமே அதிகாரம் உள்ளது. எப்படி அவரை தாக்கலாம். வாலிபரை தாக்கிய போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.