சென்னை, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என, மத்திய அமைச்சர் எல்.முருகன் புகார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை சி.எம்.டி.ஏ.,வுக்கான அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:மத்திய அமைச்சர் முருகன் புகார் தெரிவித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது. அவர் இங்கு நேரடியாக வந்து பார்வையிட்டு அதன் பின் தன் கருத்தை தெரிவிக்கலாம்.இந்த பேருந்து நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியில் பெயர் சூட்டப்பட்டுள்ளதால் அரசியல் காழ்ப்புணர்வில் இது போன்று குறை கூறுவது நல்லதல்ல.கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முந்தைய ஆட்சிக்காலத்தில் துவங்கி இருந்தாலும், அப்போது 30 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டதுடன், கூடுதலாக 90 கோடி ரூபாய் அளவுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.இந்த வளாகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக செய்து இருக்கிறோம்.அடுத்த, 50 ஆண்டுகளின் தேவையை கருத்தில் வைத்து இங்கு நடைபாதைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளங்கள் மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.அதிகாரிகள் ஆய்வு செய்து, மாற்று திறனாளிகள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் புதிய சாய்வு தளம் அமைப்பதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்படும்.அதுவரை மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்கள் எளிதாக வந்து செல்ல பேட்டரி கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கிளாம்பாக்கத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டும் தான் இயக்கப்படும் என்று கூறி இருந்தோம். ஆனால், தற்போது, 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையின் போது அனைத்து சிறப்பு பேருந்துகளையும் இயக்கும் வகையில், இங்கு வசதிகள் முழுமையாக உள்ளது. இருப்பினும், போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து கழக உயரதிகாரிகளுடன் நாளை நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான உரிய முடிவு எடுக்கப்படும்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி உள்ள பள்ளிக்கு மாணவர்கள், சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து காலை, மாலையில் பள்ளி நேரத்தில் சர்வீஸ் சாலையில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.