மக்கள் தொகை கணக்கெடுப்பு மாங்காடு நகராட்சியில் துவக்கம்
மாங்காடு: நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் என, மத்திய அரசு அறிவித்தது. அதற்கான முன்னோட்டமாக, மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள தலா ஒரு இடத்தில், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, நேற்று துவங்கி, வரும் 30ம் தேதி நிறைவடையும் என, அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு, மாங்காடு நகராட்சி தேர்வு செய்யப்பட்டது. நேற்று கணக்கெடுப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஆணை கிடைவில்லை என கூறப்படுகிறது. இதனால், மாங்காடு நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான வரைபடம் தயாரிக்கும் பணிகள் மட்டும் நேற்று நடந்தன. இன்று, மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.