லாரிக்கு அடியில் படுத்திருந்த தனியார் நிறுவன ஊழியர் பலி
திருவொற்றியூர், கன்டெய்னர் லாரிக்கு அடியில் போதையில் படுத்திருந்த, தனியார் நிறுவன ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார். திருவொற்றியூர், எஸ்.பி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுபின் வர்க்கீஸ், 44; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மாலை, திருவொற்றியூர், திருச்சினாங்குப்பம், எண்ணுார் விரைவு சாலையின் அணுகு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் அடியில், மதுபோதையில் படுத்து உறங்கியுள்ளார். இதை கவனிக்காத கன்டெய்னர் லாரி ஓட்டுநர், லாரியை இயக்கியுள்ளார். இதில், அடியில் படுத்திருந்த சுபின் வர்க்கீஸின் தலையில், லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கன்டெய்னர் லாரி ஓட்டுநரான, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கேப்ரியல் தாஸ், 40, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.