உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தரமற்ற மூடு கால்வாய் உள்வாங்கியதால் சிக்கல்

தரமற்ற மூடு கால்வாய் உள்வாங்கியதால் சிக்கல்

சென்னை: சேலையூர், மேடவாக்கம், காரணை, பெரும்பாக்கம், நாவலுார் உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், செம்மஞ்சேரி கால்வாய் வழியாக, முட்டுக்காடு கடலில் கலக்கிறது.ஒவ்வொரு ஏரிகளின் உபரிநீர் வெளியேறும் சிறிய அளவிலான கால்வாய்களை, பெரிய மூடு கால்வாயாக மாற்ற, 165 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது.இதில், ஒட்டியம்பாக்கம் ஏரி உபரிநீர் வெளியேற, 1 கி.மீ., நீளம், 30 அடி அகலத்தில், அரசன்கழனி ஏரி வரையும், அரசன்கழனி ஏரியில் இருந்து, செம்மஞ்சேரி கால்வாய் வரை, 975 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில், நுாக்கம்பாளையம் சாலையிலும் மூடு கால்வாய் கட்டப்பட்டது.மேலும், ஜெவகர் நகர், எழில் நகரில் இருந்து, செம்மஞ்சேரி கால்வாய் வரை, 140 மீட்டர் நீளத்தில், மூடு கால்வாய் கட்டப்பட்டது. இந்த பணி, கடந்த ஆண்டு முடிந்தது.நுாக்கம்பாளையம் சாலையில், கீழே 30 அடி அகல கால்வாய், மேலே 50 மற்றும் 80 அடி அகல சாலையாக உள்ளது. ஆனால், மூடு கால்வாய் மேல் பகுதி நீரோட்டம் பார்த்து கட்டவில்லை.பல இடங்களில், ஒரு அடி வரை உள்வாங்கி தாழ்வாக உள்ளது. இதனால், நேற்று முன்தினம் காலை பெய்த லேசான மழைக்கே வெள்ளம் தேங்கி உள்ளது.சிமென்ட் கான்கிரீட்டில் நிற்பதால், வெயிலில் ஆவியாகி தான் தண்ணீர் வடிய வேண்டும். இதற்கு, ஒரு வாரம் ஆகும் என்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் இவ்வழியே தாம்பரம் செல்வது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பகுதிமக்கள் கூறுகையில், 'அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், அலட்சியமாக மூடு கால்வாய் கட்டி உள்ளனர். சில இடங்களில், சீராக இல்லாமல் தாழ்வாகவும், சேதமடைந்தும் உள்ளது' என்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மூடு கால்வாய் சில இடங்களில் முறையாக அமைக்காதது, கள ஆய்வில் தெரியவந்தது. ஒப்பந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். உள்வாங்கிய பகுதியை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை