விபத்துக்களை தடுக்க கோரி ஜோதிநகரில் போராட்டம்
திருவொற்றியூர், மணலி விரைவு சாலையில், ரவுண்டானா மற்றும் அணுகு சாலை அமைக்கக்கோரி, பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து, மா.கம்யூ., கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். திருவொற்றியூர், முருகப்பா நகர் - சத்தியமூர்த்தி நகர் வரையிலான, 2.8 கி.மீ., துாரம் உள்ள மணலி விரைவு சாலையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை துறைமுகம் நோக்கி செல்லும் கன்டெய்னர் லாரிகளுக்கு இச்சாலையே பிரதானம். இந்த பகுதியில் அணுகு சாலை ஏதும் அமைக்கப்படததால், வாகனங்கள் எதிரெதிர் புறம் பயணித்து விபத்தில் சிக்குகின்றன. விபத்துக்களை குறைக்கும் வகையில், ஜோதி நகரில் ரவுண்டானா அமைக்க வேண்டும், விரைவு சாலையில், 2.8 கி.மீ., அணுகு சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, பல சங்கங்களை ஒன்றிணைந்து, மா.கம்யூ., கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில், ஜோதி நகர் சந்திப்பில், நேற்று காலை தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி பழனிசாமி உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மதியம் பேச்சு நடத்தினர். பின், கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, தொடர் காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ***