| ADDED : ஜன 30, 2024 12:17 AM
மதுரவாயல், மதுரவாயல் -- தாம்பரம் பைபாஸ் மற்றும் வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அதிகரித்துள்ள விளம்பர பேனர்களை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர்.சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும் விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விளம்பர பலகைகள் எண்ணிக்கை குறையாமல், அதிகரித்தபடி உள்ளது. இதுகுறித்து நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.செய்தி வெளியாகும்போது மட்டும், கண்துடைப்பிற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்பின் கண்டுகொள்வது இல்லை.இதன் காரணமாக தற்போது, மதுரவாயல் -- தாம்பரம் பைபாஸ், வானகரம் சுங்கச்சாவடி மற்றும் மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் ஊராட்சி பகுதி என, பல இடங்களில் மீண்டும் விளம்பர பலகைகள் அதிகரித்து உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை ஆய்வு செய்து, விளம்பர பேனர்களை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.