உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வனத்துறை அனுமதி கிடைத்ததால் ரூ.3.23 கோடியில் சாலை அமைகிறது புலிகொரடு கிராம மக்கள் நிம்மதி

வனத்துறை அனுமதி கிடைத்ததால் ரூ.3.23 கோடியில் சாலை அமைகிறது புலிகொரடு கிராம மக்கள் நிம்மதி

தாம்பரம்: பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த வனத்துறை அனுமதி கிடைத்ததை அடுத்து, தாம்பரம் அடுத்த புலிகொரடு பகுதிக்கு, 3.23 கோடி ரூபாயில் கான்கிரீட் சாலை, மழைநீர் கால்வாய் மற்றும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. தாம்பரம் - திருநீர்மலை சாலையில், கடப்பேரி ஆதிதிராவிடர் பள்ளி அருகே இடது புறம் திரும்பி, புலிகொரடு பகுதிக்கு, செல்ல வேண்டும். அச்சாலை, வனத்துறை இடத்தில் செல்வதால், தார்ச்சாலை அமைக்க முடியவில்லை. 'மெகா' பள்ளங்கள் நிறைந்துள்ள இச்சாலை, மழைக்காலத்தில் குளம்போல் மாறிவிடுவதால், புலிகொரடு மக்கள், அதன் வழியாக செல்ல பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வாக, தற்போது வனத்துறை அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, கடப்பேரியில் இருந்து புலிகொரடு வரை, 767 மீட்டருக்கு சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் 3.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கூறியதாவது: புலிகொரடுக்கான சாலை அமைக்கும் பகுதி, மாவட்ட வனத்துறை வசம் இருந்தது. அதனால், வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அணுகி, 4.50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டு, சாலை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், புலிகொரடு கிராமத்தில், ஐந்து தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. அனுமதி பெறப்பட்ட சாலையில், 3.75 மீட்டர் அகலத்திற்கு கான்கிரீட் சாலை, 0.75 மீட்டர் அகலத்திற்கு சிமென்ட் கற்கள் பதித்தல், 0.85 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் கால்வாய் அமைத்தல் என, 3.23 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இதேபோல், குன்றுமேடு முதல் கன்னடப்பாளையம் வரை, வனத்துறை இடத்தில், 1.300 கி.மீ., சாலை அமைக்கவும் வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கு, 8.20 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அதிலும் சாலை அமைக்க, விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை