| ADDED : பிப் 17, 2024 12:29 AM
புழுதிவாக்கம், சென்னை கடற்கரை- - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையைத் தொடர்ந்து, வேளச்சேரி- - பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் திட்டம், 2008ல் 495 கோடி ரூபாயில் துவக்கப்பட்டது.ஐந்து கி.மீ., துாரமுடைய இந்த வழித்தடத்தில், முக்கிய ரயில் நிலையமாக புழுதிவாக்கம் உள்ளது. நான்கு பயணச் சீட்டு முனையங்களுடன், ஆறு ஆண்டுகளுக்கு முன் ரயில் நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.ஆனால், பறக்கும் ரயில் சேவை இன்னமும் துவக்கப்படாததால், புழுதிவாக்கம் ரயில் நிலையம் எவ்வித பராமரிப்பும் இன்றி, பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இதன் ஒரு பக்க நுழைவாயில் 'ஷட்டர்' திறந்த நிலையில் உள்ளது.இந்த வழியாக ரயில் நிலைய கட்டடத்திற்குள் நுழையும் சமூக விரோதிகள், மது அருந்துவது, சீட்டு ஆடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதுடன், காலி மது பாட்டில்கள், உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே வீசிச் செல்கின்றனர்.இதனால், ரயில் நிலையத்தின் நுழைவாயில் துவங்கி, உட்புறம் உள்ள அனைத்து இடங்களும் குப்பை குவியலுடன், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.தவிர, ரயில் நிலைய கட்டுமானங்களின் சிமென்ட் பூச்சுகள் துார்ந்தும், இரும்புச் சட்டங்கள் துருப்பிடித்தும் உள்ளன.பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தை, முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.