பயணி தவறவிட்ட ஐ -- போன் ரயில்வே போலீசார் ஒப்படைப்பு
சென்னை, மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 50,000 ரூபாய் மதிப்பிலான, 'ஐ - போனை' ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் 61. இவர், கடந்த 14ம் தேதி காலையில் பெரம்பூரில் இருந்து வில்லிவாக்கத்தில் மின்சார ரயிலில் வந்து, அங்கிருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் ரயிலில், மகளுடன் பயணம் செய்தார்.வேப்பம்பட்டு ரயில் நிலையம் செல்லும்போது, அவரது சட்டை பையில் இருந்த 'ஆப்பிள் - ஐ போன்' காணாமல் போனது தெரியவந்தது.உடனே, தன் மகளின் மொபைல்போனில் இருந்து ரயில்வே இலவச எண் 139ல் புகார் தெரிவித்தார். புகாரைப் பெற்ற ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., அசோக்குமார் மற்றும் காவலர் பிரியங்கா ஆகியோர், ரயில் பாதைகளில் தேடினர்.வில்லிவாக்கத்தில், பயணியர், கடைக்காரர்கள், ரயில்வே ஊழியர்கள், நிலைய மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.பயணியர் ஒருவர் மொபைல்போனை மீட்டு, ரயில்வே அலுவலரிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். இதையடுத்து, அந்த மொபைல்போன் மீட்கப்பட்டு, பயணி விவேகானந்தனிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.