மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை நலச்சங்க நிர்வாகிகள் சரமாரி கேள்வி
அடையாறு, வரும் பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, நலச்சங்கங்களுடான ஆலோசனை கூட்டம், அடையாறு மண்டலத்தில் நேற்று நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நலச்சங்க நிர்வாகிகள், சரமாரியாக கேள்விகள் எழுப்பி பேசியதாவது: வேளச்சேரி ஏரி நீர், சதுப்பு நிலத்தை அடைவதில் சிக்கல் ஏற்படுகிறது. வீராங்கால் கால்வாய் நீரை, நேராக சதுப்பு நிலம் கொண்டு செல்லும் வகையில் கட்டமைப்பு அமைக்க வேண்டும். ரயில்வே நீர்வழிப்பாதையில் அடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், வேளச்சேரியின் ஒரு பகுதி, தரமணி பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என, பல ஆண்டுகளாக கூறுகிறோம். இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. வடிகாலில் உள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விஜயநகரில் இருந்து பகிங்ஹாம் கால்வாயை இணைத்து அமைத்த 4 கி.மீ., துார மூடு கால்வாயில், மழைநீர் செல்லவில்லை. கால்வாய்க்குள் பாறை தடுப்பதால், அதை தகர்த்து நீரோட்டம் ஏற்படுத்த வேண்டும். கோட்டூர்புரம் வாரிய குடியிருப்பில் தேங்கும் மழைநீரை வடிய வைக்க முடியாத நிலையே தொடர்கிறது. பெசன்ட்நகர், கலாஷேத்ரா காலனி, திருவான்மியூரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க முடியவில்லை. ஐ.ஐ.டி.,யில் இருந்து வரும் மழைநீரை நேராக, பகிங்ஹாம் கால்வாய் கொண்டு செல்லும் வகையில் கட்டமைப்பு இல்லாததால், தரமணி, பள்ளிப்பட்டு, களிக்குன்றம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய குடிநீர் வாரியம், மின்வாரியம், நீர்வளத்துறை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் வரவில்லை. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் பதில் கூறி சமாளித்தனர். 'ஏன் இதர துறைகளை அழைக்கவில்லை' என கேட்டதற்கு, 'அடுத்த கூட்டத்தில் அவர்களும் பங்கேற்பர்' என, தெரிவிக்கப்பட்டது.