ஏசி பெட்டியில் புகுந்த மர்ம நபர் ராஜஸ்தான் ரயில் 50 நிமிடம் தாமதம்
சென்னை,விரைவு ரயிலின் 'ஏசி' பெட்டியில் புகுந்து, அட்டகாசத்தில் ஈடுபட்ட மர்ம நபரால், ராஜஸ்தான் ரயில் 50 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7:45 மணிக்கு, விரைவு ரயில் புறப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சென்றது. இந்த ரயில் சூலுார்பேட்டை அருகில் சென்றபோது, 'பி2' ஏசி பெட்டியில் புகுந்த ஒருவர், அட்டகாசத்தில் ஈடுபட்டு, பயணியரிடம் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், பயணியர் பதற்றம் அடைந்தனர். இது குறித்து, பயணியர் ரயில்வேயின் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் விரைந்து வந்து, ரயிலின் 'பி2 மற்றும் பி3' பெட்டியில் ஏறி, அந்த நபரை தேடினர். அப்போது, அந்த நபர் அங்குள்ள கழிப்பறையின் உள்ளே புகுந்து, 'லாக்' செய்து விட்டார். போலீசார் எச்சரித்து கதவை திறக்கவில்லை. வேறு வழியின்றி போலீசார், கழிப்பறையின் லாக்கை உடைத்து, அவரை பாதுப்பாக வெளியேற்றினர். அவரை நடைமேடையில் இறக்கினர். 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். பெயர், ஊர் குறித்த எந்த விபரமும் தெரியவில்லை. இதையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல ரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால், சென்னை - பகத் கீ கோதி விரைவு ரயில், 50 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த தடத்தில் செல்லும் மற்ற ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.