மின் வாரியம் தோண்டி போட்டதால் பல்லாங்குழியான ராமாபுரம் சாலை
ராமாபுரம், வளசவராக்கம் மண்டலம், 154 வது வார்டு ராமாபுரத்தில், சாந்தி நகர் பிரதான சாலை அமைந்துள்ளது. இச்சாலை, போரூர் - மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை டி.எல்.எப்., ஐ.டி., வளாகம் மற்றும் ராமாபுரம் பாரதி சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. ஐ.டி., நிறுவனத்திற்கு செல்லும் ஏராளமானோர், இச்சாலையை பயன்படுத்துகின்றனர். குடிநீர் வாரிய பணியால், சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்த இச்சாலை, கடந்த ஆண்டு சீர் செய்யப்பட்டது. தற்போது, இச்சாலையில் மின் வாரியம் சார்பில் கேபிள் பதிக்க, சாலை நடுவே பள்ளம் தோண்டியுள்ளனர். ஆனால், பணிகள் முடிந்த பிறகு, சாலை முறையாக சீர் செய்யப்படவில்லை. இதனால், சாலை மீண்டும் கரடு முரடாக மாறி உள்ளது. வாகனங்கள் செல்லும் போது, அதிகளவில் புழுதி பறக்கிறது; சிறுமழைக்கே சகதிக்காடாக மாறி விடுகிறது. எனவே, இச்சாலையில் நடைபெறும் மின் வாரிய பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.