உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் வெள்ளத்தை எதிர்கொள்ள...தயார்!:தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நம்பிக்கை

சென்னையில் வெள்ளத்தை எதிர்கொள்ள...தயார்!:தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா நம்பிக்கை

சென்னை:''இதற்கு முன்பு வெள்ளம் வந்தபின் நடவடிக்கை எடுப்போம். தற்போது வெள்ளத்தை எதிர்நோக்கி தயாராக உள்ளோம். பருவமழையை எதிர்கொள்ள, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,'' என, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.சென்னை எழிலகத்தில், 5.12 கோடி ரூபாயில் அமைக்கப்படும், பல்துறை ஒருங்கிணைப்பு அரங்கம், கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று ஆய்வு செய்தார்.பின், ராயபுரம் மண்டலம் வ.உ.சி., சாலை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள, இலவச பொதுக் கழிப்பறையை பார்வையிட்டார்.

100 சதவீதம்

கொளத்துார், மாதவரம் பகுதியில் உள்ள, தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாய் 91.36 கோடி ரூபாயில் அகலப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டார். கொளத்துார், பெரவள்ளூரில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்ட, பின், அவர் அளித்த பேட்டி:சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், கடந்த முறை எதிர்பாராத கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் மீண்டும் மழை வந்தால், அதை எதிர்கொள்ள 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்.அதற்காக பல நடவடிக்கைகளை, அரசு எடுத்து வருகிறது. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு, சென்னை எழிலகத்தில் 11,000 சதுர அடியில், அலுவலகம் தயார் செய்யப்பட்டு உள்ளது.அங்கு அனைத்து விதமான, நவீன தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முதல் தளத்தில், 5,000 சதுர அடியில், வெள்ள முன்னெச்சரிக்கை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு தனி மையம் தயாராகி வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து விடும்.அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைப்பு பணிகள், ஒரே இடத்தில் மேற்கொள்ள, இது உதவியாக இருக்கும்.சென்னை மாநகராட்சி சார்பில், பரவலாக்கப்பட்ட 19 பேரிடர் நிவாரண மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதேபோல, மாநில அரசு சார்பில் நான்கு மண்டலங்களில் பேரிடர் மையம் ஏற்படுத்த உள்ளோம். படகுகள், தேவையான ஆட்கள், மரங்களை அகற்றும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்படும். வெள்ளத்தின்போது பால், பிரட் கிடைக்காத நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்க, பால் பவுடர், பிரட் போன்ற அனைத்து பொருட்களையும், மழைக்கு முன்பாக தயார் செய்து வைக்க உள்ளோம்.

இரு வாரம்@

@முன்பு வெள்ளம் வந்த பின் நடவடிக்கை எடுப்போம்; தற்போது வெள்ளத்தை எதிர்நோக்கி தயாராக இருக்க உள்ளோம். உதாரணமாக, சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில், எவ்வளவு மழை பெய்கிறது; எவ்வளவு பரப்பளவு உள்ளது; மழை பெய்தால் எவ்வளவு தண்ணீர் வரும்; எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படும் என்பது கணக்கிடப்படுகிறது.இதன் வாயிலாக, எவ்வளவு மழை பெய்தால், எந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கும் என்பது கண்டறியப்பட்டு, அதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகள் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் முடிக்கப்படும்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம், பணிகள் நடக்கும் பகுதியில் மழைநீர் தேங்கினால், அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், பாலப்பணி நடக்கும் பகுதியில், மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறையிடம் அறிக்கை பெற்று, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இயற்கை எப்படி என, நாம் கணிக்க முடியாது. ஒரே நேரத்தில் அதிக மழை பெய்தால் அடையாறு, கூவம், பகிங்காம் கால்வாய் வழியே தான் வெளியேற வேண்டும். அதிக மழை பெய்தால், பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். மதுரவாயல் துறைமுகப் பணி நடந்து வருகிறது. அவர்கள் பணி செய்யும்போது, தண்ணீர் செல்வதை தடுக்கக் கூடாது எனக் கூறியுள்ளோம். கழிவுகளை அகற்றி, செப்டம்பர் மாதத்திற்குள் தண்ணீர் இடையூறு இல்லாமல் செல்ல, ஏற்பாடு செய்யப்படும். பணி முடியாமல் இருந்தால், வடகிழக்கு பருவ மழை வருவதற்கு முன் பணியை நிறுத்தி, தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடு செய்ய உள்ளோம்.கொசஸ்தலை ஆற்றில் நடந்து வரும் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.வாய்ஸ் பபுள்-''பிரட், பால் பவுடர், படகுகள் தயார்''மக்களே வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

bgm
ஜூலை 22, 2024 04:18

போன வருசம் இபடித்தான் சொன்னாங்க. வழக்கமான மழைக்கே வரலாறு காணாத வெள்ளம் சென்னையில். மறுபடியுமா...? விடியலை நோக்கி...


kulandai kannan
ஜூலை 21, 2024 17:34

அடிச்சு உடுங்க.


அப்புசாமி
ஜூலை 21, 2024 12:35

எப்புடி? இந்த வருஷத்திலும் 4000 கோடிக்கு சாக்கடை தூர் வாரிட்டீங்களா சார்? போதுமா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை