செங்குன்றம், 'மிக்ஜாம்' புயல், மழை வெள்ளத்தில் இருந்து மீண்டாலும், ஆங்காங்கே குவிந்துள்ள குப்பை கழிவால் ஏற்படும் சுகாதார சீர்கேடால் தவிப்பதாக, தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சென்னை புழல் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி, 'மிக்ஜாம்' புயல் மழையால் பாதிக்கப்பட்டது. அங்குள்ள இருசப்பன் தெரு, விவேக் அக்பர் அவென்யூ, குமரன் நகர் ஆகியவை மழை வெள்ளத்தில் மூழ்கின. அங்குள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்தோர், 4 அடி ஆழம் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.மழைநீர் போக்கு கால்வாய்களின் ஆக்கிரமிப்பால், ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவது தொடர்கிறது.மழை வெள்ள பாதிப்பின் போது நேரில் ஆய்வு செய்யும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், மழை ஓய்ந்த பின் சீரமைப்பு பணிகளை கவனிப்பதில்லை. கடந்த டிசம்பரிலும், வழக்கம் போல் மழையால் பாதிப்பு ஏற்பட்டது.குமரன் நகர், விவேக் அக்பர் அவென்யூ ஆகியவற்றில், ஒரு மாதம் கடந்த பிறகும், மழை வெள்ளம் வடிந்தாலும், மழைநீருடன் கழிவுநீர் தேங்கி உள்ளது. மழை வெள்ளம் வடிந்த பின், ஆங்காங்கே தேங்கிய குப்பை கழிவுகள், நேற்று வரை அகற்றப்படவில்லை. குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. கழிவுநீர் மற்றும் குப்பை தேக்கத்தால், பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி தவிக்கின்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:மழை வெள்ள பாதிப்பில் இருந்து, ஓரளவு மீண்டாலும், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளின் அலட்சியத்தால், சுகாதார சீர்கேட்டில் சிக்கி உள்ளோம். இங்குள்ள தெருக்களில் குவிந்துள்ள குப்பை, கழிவுகள் இதுவரை அகற்றப்படவில்லை. ஊராட்சி மன்றத்தில் இருந்து, இந்த பகுதிகள், 3 கி.மீ., துாரத்தில் இருப்பதால், இந்த நிலை நீடிக்கிறது. வாரம் ஒரு முறையாவது குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.