கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பு ஓமந்துாரார் மருத்துவமனையில் மறுவாழ்வு
சென்னை:கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு, நுண் துளை சிகிச்சை செய்து, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த, 27 வயது பெண், நான்கு மாதங்களாக வயிறு வீக்கம், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் சரியாகததால், சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.'சிடி ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்ததில், அப்பெண்ணின் கல்லீரலில் இருந்து வரும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால், கல்லீரல் வீக்கமடைந்து, 50 சதவீதம் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனை இயக்குனர் மணி, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த குமார் வழிகாட்டுதலின்படி, இடையீட்டு கதிர்வீச்சு துறை டாக்டர் பெரியகருப்பன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதன்படி, நுண் துளை வழியாக பைபாஸ் சிகிச்சை மேற்கொண்டு அடைப்பு ஏற்பட்டிருந்த ரத்தக்குழாயில், 'ஸ்டெண்ட்' பொருத்தி சரி செய்யப்பட்டது.இதுகுறித்து டாக்டர் பெரியகருப்பன் கூறியதாவது:இந்த பெண்ணின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கல்லீரல் மாற்று சிகிச்சை. ஆனால், கல்லீரல் மாற்று சிகிச்சையை எல்லோருக்கும் செய்ய முடியாது. திறந்த அறுவை சிகிச்சை இல்லாமல், நுண் துளை பைபாஸ் சிகிச்சை மேற்கொண்டு, 'ஸ்டெண்ட்' வைத்து ரத்தக்குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பின், அப்பெண் நலமுடன் உள்ளார். பழுதடைந்த கல்லீரலும் மீண்டும் கொஞ்சம், கொஞ்மாக பழைய நிலைக்கு திரும்பும். தனியார் மருத்துவமனையில், 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இங்கு, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டது. இதுவரை, 18 நோயாளிகளுக்கு, இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.