உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் சூழ்ந்த கோவில் குளம் பள்ளிக்கரணையில் சீரமைப்பு

கழிவுநீர் சூழ்ந்த கோவில் குளம் பள்ளிக்கரணையில் சீரமைப்பு

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை, தாம்பரம்- - வேளச்சேரி பிரதானசாலையை ஒட்டி, பிள்ளையார் கோவில் குளம் அமைந்துள்ளது.குளத்தைச் சுற்றி, சிட்டிபாபு நகர், அம்பாள் நகர் ஆகியவை அமைந்துள்ளன. அங்கு, 1,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.புலம் எண் 137ல் உள்ள இந்த குளம், 2.37 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளக்கரைகளில், கட்டட இடிபாடுகளை கொட்டி, மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டது போக, ஒரு ஏக்கருக்கும் குறைவாகவே குளம் எஞ்சியுள்ளது.மாநகராட்சி ஆன பின் ஆக்கிரமிப்பு தடுக்கப்பட்டாலும், அக்குளத்திற்கு மழைநீர் செல்லும் வழித்தடமும் மூடப்பட்டது.குளத்தில் குப்பை, கழிவுகள் கொட்டி வந்தனர். குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பாளர்கள், தங்கள் வீடுகளின் கழிப்பறை, குளியலறை கழிவுகளை குளத்தில் நேரடியாக விட்டு வந்தனர். இதனால், குளம் மாசடைந்தது.இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ச்சியாக செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், குளத்தை துார் வாரி சீரமைக்கும் பணியை, தற்போது மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பெருங்குடி மண்டலம், 190வது வார்டில் உள்ள பிள்ளையார் கோவில் குளம், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் துார் வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மழைநீர் சேகரமாக வகை செய்யப்படுகிறது.குளத்தின் கரையைச்சுற்றி, 1,599 சதுர மீட்டரில், மண் சரிவு ஏற்படாமல் இருக்க, வெட்டி வேருடன், 'ஜியோசெல் பைபர்' பொருத்தப்படுகிறது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி