அதிகாலை 4:00 மணி முதல் மெட்ரோ ரயில் இயக்க கோரிக்கை
திருவொற்றியூர், திருவொற்றியூர் நலச்சங்கத்தின் வருடாந்திர பொது உறுப்பினர் கூட்டம், நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் கிளை நுாலகத்தில், கவுரவ தலைவர்கள் ஜி.வரதராஜன், துரைராஜ் தலைமையில் நடந்தது.அதில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை தீர்மானங்கள்:சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, அதிகாலை 5:00 மணி முதல் பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்களை பயன்படுத்தும், வடசென்னை வாசிகளுக்கு ஏதுவாக, அதிகாலை 4:00 மணி முதல், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.வடமாநிலங்களின் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் பயணியரின் நலனை கருத்தில் வைத்து, விம்கோ நகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் வகையில், கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்.திருவொற்றியூரில், 10,000 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வரும் காலங்களில், தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீண்ட காலமாக இருந்து வரும், கன்டெய்னர் லாரியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.இவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் குரு சுப்பிரமணி, குமார், கோதண்டம், முருகன், பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.