வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தாங்கல் ஏரிக்கரையில் சீரமைப்பு பணி
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, தாமரைக்கேணி தாங்கல் ஏரி 25 ஏக்கர் பரப்பு உடையது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இந்த ஏரியில், ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகள் உள்ளன.கனமழையின்போது ஏரி நிரம்பி, சுற்றி உள்ள குடியிருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், கரையை பலப்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாநகராட்சி சார்பில், 50 லட்சம்ரூபாய் செலவில், ஏரியில்உள்ள ஆகாயத் தாமரையை அகற்றி, கரை பலப்படுத்தும் பணி நடக்கிறது.இந்த பணியில், இரண்டு மிதவை மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன. மைய பகுதியில், தீவு போல் திட்டு உள்ளது. அதில் உள்ள புதரும் அகற்றப்படுகிறது. ஓ.எம்.ஆரை ஒட்டி இந்த ஏரி உள்ளது. இதனால், ஐ.டி., உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து, சி.எஸ்.ஆர்., நிதி பெற்று, ஏரியை மேம்படுத்தினால், ஓ.எம்.ஆரின் அழகு மேலும் அதிகரிக்கும் என, சோழிங்கநல்லுார் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஏரிக்கரையை பலப்படுத்த எதிர்ப்பு
வார்டு 199ல், மாடர்ன் பள்ளி சாலை 2 கி.மீ., நீளம், 40 அடி அகலம் உடையது. இந்த சாலையில், காசாகிராண்ட், ரேடியன்ஸ், பிரெஸ்டிஜ், பேங்கர் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்பில், 3,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலையில், 1.4 கி.மீ., துாரம் வரை பிரச்னை இல்லை. இடையில், 600 மீட்டர் துாரம் சாலையை, சிலர் உரிமை கொண்டாடி, வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இங்குள்ள, ரெட்டைகேணி தாங்கல் ஏரிக்கரை வலுவிழந்து இருப்பதால், கனமழை பெய்தால் மாடர்ன் பள்ளி சாலையில் வெள்ளம் வடிந்து குடியிருப்புகள் பாதிக்கப்படும். இதனால், போக்குவரத்து பாதித்து, அங்கு வசிப்போர், ஓ.எம்.ஆர்., செல்ல முடியாத நிலை ஏற்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையை பலப்படுத்தி, ஆகாயத்தாமரையை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. நேற்று முன்தினம், பணி துவங்கும்போது, சாலைக்கு உரிமை கொண்டாடிய சிலர், எதிர்ப்பு தெரிவித்து, வாகனங்களை மறித்து, பணி செய்யவிடாமல் தடுத்தனர். வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, போலீஸ் பாதுகாப்புடன் ஏரிக்கரையை பலப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.