ஓய்வுபெற்ற ஊழியர்கள் 3 இடங்களில் மறியல் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னை, போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நேற்று காலை, மூன்று பிரதான சாலை சந்திப்புகளில் அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்டதால், அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, 24 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வுகால பலன்கள் வழங்கக்கோரி, சென்னை பல்லவன் இல்லம் முன், மா.கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. நேற்று காலை மீண்டு ம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட, போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் சவுந்தராஜன் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களை, திருவல்லிக்கே ணி போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், அண்ணாசாலை - பல்லவன் சாலை சந்திப்பு, சிம்சன் சிக்னல், வாலாஜா சாலை சந்திப்பு என, அடுத்தடுத்து மூன்று பிரதான சாலை சிக்னலில், மறியலில் ஈடுபட்டனர். இதனால் அண்ணாசாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை, பல்லவன் சாலை, டேம்ஸ் சாலை, ஆதித்தனார் சாலை உள்ளிட்ட சாலை களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் மறியல் போராட்டம் நடந்ததால், செய்வது அறியாமல் போலீசார் திணறினர். பின் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மறியலில் ஈடுபட்ட, 207 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், திருவல்லிக்கேணி வி.ஆர்., பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், 117 பேரும், பெரியமேடு பகுதி கண்ணப்பர் திடலில், 90 பேரும் வைக்கப்பட்டனர். மறியலால் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகே, அண்ணாசாலை உட்பட பிரதான சாலைகளில் போக்குவரத்து சீரானது.