உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுாரில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம்: திறன்வாய்ந்த அதிகாரிகள் பற்றாக்குறையே காரணம்

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுாரில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம்: திறன்வாய்ந்த அதிகாரிகள் பற்றாக்குறையே காரணம்

அடையாறு: சென்னையில் பெய்யும் ஒவ்வொரு பருவமழைக்கும், தென் சென்னைக்கு உட்பட்ட, பெருங்குடி, அடையாறு, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்கள், பெரிய அளவில் பாதிக்கப்படும்.குறிப்பாக, வேளச்சேரி, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, பெருங்குடியை சூழும் மழை வெள்ளத்தால், அப்பகுதியினர் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்தாண்டு பருவமழை பாதிப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதிகளை கையாள, முன் அனுபவம், திறமையான அதிகாரிகள் களத்தில் இருக்க வேண்டும்.

சிக்கல்

குறிப்பாக, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து பணி செய்வதில், மண்டல உதவி கமிஷனர்கள், செயற்பொறியாளர்கள் பணி முக்கியமானவை.ஆனால், இந்த மூன்று மண்டலங்களிலும், மழையை எதிர்கொள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகள் குறைவாக உள்ளதால், இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.குறிப்பாக, பெருங்குடி மண்டலம், உதவி கமிஷனர் இல்லாமல் இயங்குகிறது. சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒரு செயற்பொறியாளர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதால், அவரை வைத்து வேலை வாங்க முடியவில்லை என, மேல் அதிகாரிகள் புலம்புகின்றனர்.

திணறல்

அடையாறு மண்டலத்தில், அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் வேளச்சேரி, கிண்டி, தரமணி பகுதியை கண்காணிக்கும் செயற்பொறியாளருக்கு, தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.அதேபோல், சோழிங்கநல்லுார், அடையாறு மண்டல உதவி கமிஷனர்கள், பதவி உயர்வு பட்டியலில் உள்ளதால், விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளது.இதன் காரணமாக, மூன்று மண்டலங்களில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தொய்வு ஏற்படும் என, மக்கள் அச்சப்படுகின்றனர்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தென் சென்னை, புறநகரில் உள்ள 60க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வடியும் மழைநீர், மூன்று மண்டலங்களில் உள்ள கால்வாய் வழியாக, கடலில் சேர்கிறது.மழைக்காலத்தில், நீர்வளம், வருவாய், குடிநீர், மின் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பை, மாநகராட்சி அதிகாரிகள் கேட்டு பெற வேண்டும்.இதற்கு, மண்டலங்களில் உள்ள உதவி கமிஷனர்கள், செயற்பொறியாளர்கள் பணி முக்கியம். பருவமழைக்கு இரண்டு, மூன்று மாதங்களுக்குமுன், பணியிட மாற்றம் வழங்கப்பட்டது.இதனால், திட்டப் பணியில் இருந்த செயற்பொறியாளர்கள், களப்பணிக்கு புதிதாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் பணிகளை கையாள்வதில் சிரமம் ஏற்படுவதால் திணறுகின்றனர்.

அவசியம்

மண்டலங்களை முழுமையாக அறிந்து கொள்ளவே, ஆறு முதல் 10 மாதங்கள் ஆகும். பணியிட மாற்றத்தை, ஜன., -- பிப்., மாதத்தில் செய்திருந்தால், வெள்ள பாதிப்பு பகுதிகளை, முழுமையாக அறிந்திருக்க முடியும்.மூன்று மண்டலங்களின் தேவையை உணர்ந்து, வரும் பருவமழையை எதிர்கொள்ள, தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பணியிட மாற்றத்தில், பெரிய அளவில் மாற்றம் தேவை. மண்டலத்தின் வளர்ச்சி, வெள்ள பாதிப்பு, கட்டமைப்பை கருத்தில் கொண்டு உதவி கமிஷனர், செயற்பொறியாளர்கள் நியமிப்பது அவசியம். மாநகராட்சி கமிஷனர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nandakumar Naidu.
செப் 27, 2024 15:00

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யுங்கள், உலகத்திறன் வாய்ந்த தொழில் வல்லுனர்கள் கிடைப்பார்கள். எங்கோ....... ....போய்விடுவீர்கள்.


Subramanian
செப் 28, 2024 06:06

அருமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை