உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொடர்  மின்வெட்டால் ஆத்திரம் அண்ணனுாரில் சாலை மறியல்

தொடர்  மின்வெட்டால் ஆத்திரம் அண்ணனுாரில் சாலை மறியல்

ஆவடி, ஆவடி அடுத்த அண்ணனுார் சுற்றுவட்டார பகுதிகளான பெரியார் நகர், சத்யா நகர், அண்ணா நகர், ஜோதி நகர் மற்றும் விவேகானந்தா நகர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஐந்து நாட்களாக இரவு வேளைகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது.கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை, தினமும் இரவு 10:00 மணிக்கு மேல் ஏற்படும் மின்வெட்டு, மறுநாள் காலை 7:00 மணி வரை நீடிக்கிறது. இதனால், மேற்கூறிய பகுதிகளில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், ஆவடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது. ஆனால், மழை விட்டும் இரவு 10:00 மணி வரை, மின் வினியோகம் சீராகவில்லை.இதனால் ஆத்திரமடைந்த சத்யா நகர் பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர், அண்ணனுார் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அயப்பாக்கம் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து வந்த திருமுல்லைவாயில் போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

'உடனுக்குடன்

சரிசெய்கிறோம்'இது குறித்து மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது:கடந்த சில நாட்களாக, மாலை வேளைகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மரம், கிளைகள் விழுந்து, 'டிரிப்'ஆகி, ஜம்பரில் கோளாறு ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படுகிறது.ஒரு ஜம்பரில் பழுது கண்டறிந்து சரி செய்வதற்கு, அரை மணி நேரம் தேவைப்படும். இவ்வாறான சூழலில் மின் வினியோகம் சரிசெய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மற்றபடி, உடனுக்குடன் மின் வினியோகம் சீர்செய்கிறோம்.பகுதிவாசிகள் குற்றச்சாட்டுவது போல, எட்டு மணி நேரம் மின்வெட்டு ஒன்றும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி