பஸ் மோதி இறந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்
சென்னை, காஞ்சிபுரம் - -வந்தவாசி சாலை அருகே, தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்த விவசாயிக்கு, சோழமண்டலம் காப்பீடு நிறுவனம், 25 லட்சத்து, 47,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், பொன்னுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன், 45. விவசாயி. இவர், ஆடுகளை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.கடந்த 2022 அக்., 3ல், ஆடுகளை வாங்கி விற்பது தொடர்பாக, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், நெடுங்கல் பேருந்து நிறுத்தம் எதிரே, ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த தனியார் பேருந்து மோதியதில் கோவிந்தராஜன் உயிரிழந்தார்.இதையடுத்து, தன் கணவரின் இறப்புக்கு, 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி, கோவிந்தராஜனின் மனைவி சுந்தரி, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி மூர்த்தி, 'அஜாக்கிரதை, அதிவேகமாக பேருந்தை ஓட்டி சென்றதால் விபத்து நடந்துள்ளது' எனக் கூறி, மனுதாரருக்கு சோழமண்டலம் காப்பீடு நிறுவனம், இழப்பீடாக 25 லட்சத்து 47,000 ரூபாய் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டார்.