உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மடிப்பாக்கத்தில் ரூ.3 கோடி அரசு நிலம் கபளீகரம் அதிகாரிகளின் சுற்றறிக்கையை மதிக்காத ஆக்கிரமிப்பாளர்கள்

மடிப்பாக்கத்தில் ரூ.3 கோடி அரசு நிலம் கபளீகரம் அதிகாரிகளின் சுற்றறிக்கையை மதிக்காத ஆக்கிரமிப்பாளர்கள்

மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 188க்கு உட்பட்டது மடிப்பாக்கம். இதன் விரிவு பகுதியாக, -ராம் நகர், பாகீரதி நகர் உள்ளன. இங்கு, 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.பாகீரதி நகர் ஜெ.கே., சாலைக்கும், வேளச்சேரியிலிருந்து மடிப்பாக்கம் செல்லும் பிரதான பஜார் சாலைக்கும் இடையே, அரசுக்கு சொந்தமான, 3,224 சதுர அடி காலி இடத்தை, இரு தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த காலி இடம், பள்ளிக்கரணை சர்வே எண் 663/5சி கீழ் வருகிறது.ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில், சற்குணம் என்பவர் வசம் 1,144 சதுர அடியும், முருகா ஹார்டுவேர்ஸ் கடை நிர்வாகம் வசம் 2,080 சதுர அடியும் உள்ளன. இதன் மொத்த மதிப்பு, மூன்று கோடி ரூபாய்.ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை மீட்டு, மடிப்பாக்கம் -- வேளச்சேரி பிரதான பஜார் சாலைக்கும், ஜெ.கே., சாலைக்கும் இடையே இணைப்பு சாலை அமைக்கப்பட்டால், இப்பகுதிவாசிகள், இரு நிமிடங்களில் பிரதான பஜார் சாலைக்கு நடந்து செல்ல முடியும்.தவிர, இணைப்பு சாலை அமைத்தது போக மீதமுள்ள இடத்தில், இப்பகுதிவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கலாம்.எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்க, அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் புகார் எழுப்பியுள்ளனர்.இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவன், 59, கூறியதாவது:பாகீரதி நகர் வரைபடத்தில், இந்த இடம் இணைப்பு சாலைக்கு உரியது என, 1973ம் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது, இரு நபர்களால் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளால், இணைப்பு சாலை இல்லாமல், இப்பகுதிவாசிகள் ஒரு கி.மீ., சுற்றி, பிரதான பஜார் சாலைக்கு செல்கின்றனர்.ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி, கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆக்கிரமிப்பு தொடர்பான செய்தி நம் நாளிதழில் வெளிவந்ததன் விளைவாக, அவ்விடத்தில் எவ்வித கட்டுமான பணிகளையும் தொடரக்கூடாது என, ஆக்கிரமிப்பாளர்கள் இருவருக்கும், மாநகராட்சி சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.பின், கடந்த 2022 அக்டோபரில், வட்டாட்சியர் வாயிலாக இரு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தனித்தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, 15 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் அவற்றை பொருட்படுத்தவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள தாசில்தார் நேரடியாக பார்வையிட்டு, 80 நாட்களுக்கு மேலாகியும், இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை