ரூ.7 லட்சம் மோசடி: தஞ்சை வாலிபர் கைது
மடிப்பாக்கம்: குறைந்த விலையில் 'எலக்ட்ரானிக்ஸ்' பொருட்கள் வாங்கித் தருவதாக, 7 லட்சம் ரூபாய் சுருட்டிய மோசடி வாலிபர், கைது செய்யப்பட்டார். மேடவாக்கம் அடுத்த மடிப்பாக்கம், ராம்நகர் தெற்கு, பஜார் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 61. இவர், மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஹோட்டலில் மேலாளராக பணிபுரிகிறார். கடந்த 2023 மார்ச் மாதம், தஞ்சாவூரைச் சேர்ந்த தவான், 30 என்பவர், சில மாதங்கள் அந்த ஹோட்டலின் அறையில் தங்கியுள்ளார். அப்போது, சங்கரிடம் 'ஐ-போன், லேப்டாப், டிவி' உள்ளிட்ட மின்னணு பொருட்களை, குறைந்த விலையில் வாங்கி தர முடியும் என, தவான் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சங்கர், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மற்றும் ரொக்கமாக என, 7 லட்சம் ரூபாயை தவானிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில், தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறிய தவான், விடுதி அறையை காலி செய்துள்ளார். சங்கர் பலமுறை தவானை தொடர்பு கொண்டபோதும், மின்னனு பொருட்களை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் சங்கர் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மடிப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் பதுங்கி இருந்த தவானை நேற்று முன்தினம் கைது செய்து விசாரிக்கின்றனர்.