உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மோட்டார் வைத்து நீரை வெளியேற்றி மெய்யூர் ஏரியில் மணல் கொள்ளை

மோட்டார் வைத்து நீரை வெளியேற்றி மெய்யூர் ஏரியில் மணல் கொள்ளை

செங்கல்பட்டு: மெய்யூர் ஏரியில் தேங்கியுள்ள நீரை, விதிகளை மீறி ஒப்பந்ததாரர் மோட்டார் வைத்து வெளியேற்றி, மண் கொள்ளை நடத்தி வருவதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மெய்யூர் ஏரி. இந்த ஏரியில் இருந்து மண் எடுக்க, 2023ம் ஆண்டு ஒப்பந்ததாரருக்கு, கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அதன்பின், 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக, லாரிகளில் மண் எடுத்து விற்க துவங்கினர். அப்போது, 4 அடிக்கு மேல் இருந்த களிமண்ணை எடுத்த பின், பாலாற்று மணல் கிடைத்தது. இந்த மணல், முறைகேடாக விற்கப்பட்டு வருகிறது. பாலாற்றில் இருந்து மணல் எடுக்க, 2012ம் ஆண்டிலிருந்து தடை விதிக்கப்பட்டு உள்ளதால், மெய்யூர் ஏரி மண்ணிற்கு அமோக வரவேற்பு உள்ளது. அனுமதி பெற்றது 3 அடி என்றாலும், 15 அடி ஆழத்தில் தோண்டி மணல் எடுக்கப்படுகிறது. ஒரு லாரி மணல், 40,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரசியல் வாதிகள் முதல் உள்ளூர் போலீசார் வரை ஆதரவு உள்ளதால், விதிமுறைகளை மீறி மணல் கொள்ளை தொடர்கிறது. இதற்கிடையில், மெய்யூர் ஏரியில் மண் எடுக்க, மற்றொரு தனியார் ஒப்பந்ததாரருக்கு, கடந்த செப்டம்பரில், கனிம வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. தற்போது மழை பெய்து ஏரி நிரம்பியுள்ளது. ஆனாலும், ஒப்பந்ததாரர்கள் தன் கடமையை விட்டுவிடவில்லை. மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு, மணல் அள்ளும் அவலம் நடந்து வருகிறது. இதனால், விவசாயமும், நிலத்தடி நீர் பாதிப்பும் ஏற்படும்; அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மெய்யூர் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, கனிம வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'திருவடிசூலம், மெய்யூர் ஏரிகளில், 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி மண் எடுத்திருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !