உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்கள் போராட்டத்தால் மாநகராட்சி திணறல்: சுகாதாரத்திற்கு சவால் விடும் வகையில் தேங்குது குப்பை

துாய்மை பணியாளர்கள் போராட்டத்தால் மாநகராட்சி திணறல்: சுகாதாரத்திற்கு சவால் விடும் வகையில் தேங்குது குப்பை

சென்னை :துாய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும், சென்னை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆறு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஆறு மண்டலங்களில் குப்பை தேக்கம் அடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை எப்படி தீர்ப்பது என தெரியாமல், மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.சென்னை மாநகராட்சியில் வசிக்கும் ஒரு கோடி பேரிடம் இருந்து தினமும், 6,100 டன் வரை குப்பை சேகரமாகிறது. குப்பையை சேகரிக்க, 17,000 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சேகரிக்கப்படும் குப்பை, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பணியாற்றுவதில்லை என, தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், 2010ம் ஆண்டு முதல், ஒப்பந்த அடிப்படையில்தான் துாய்மை பணியாளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், 4,992 துாய்மை பணியாளர்கள் சேர்ந்தனர். அப்போதும் பணிகளில் சுணக்கம் ஏற்படவே, தனியார் நிறுவனங்களில் குப்பை மேலாண்மை ஒப்படைப்பட்டது. அதன்படி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்துாரில் சில வார்டுகளில், குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இவர்களுக்கு, குப்பையின் அளவுக்கு ஏற்ப, கட்டணத்தை மாநகராட்சி வழங்கி வருகிறது. அதேபோல், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, இம்மாதம் 1ம் தேதி முதல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்துார் மண்டலம் முழுதும் என, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றை கண்டித்து, துாய்மை பணியாளர்கள், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.நகர் மண்டலங்கள், மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி, ரிப்பன் மாளிகை எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலை நடைபாதையில் கூடாரம் அமைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் தொடர் போராட்டங்களால், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணாநகர் மண்டலங்களில், குப்பை தேக்கம் அதிகரித்து உள்ளது. வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி, ஐந்து நாட்களாக தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாலையோரங்கள் மற்றும் குப்பை தொட்டி இருக்கும் இடங்களில், குப்பை குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட, ராயபுரம், வால்டாக்ஸ் சாலை, பிராட்வே, கொத்தவால்சாவடி, மண்ணடி, எழும்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் குப்பை பெருமளவில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில், 90 சதவீதம் குப்பை அள்ளும் பணி நடைபெறவில்லை என, துாய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். குப்பை தேக்கத்தால், சென்னை மக்கள் பல்வேறு சுகாதார பிரச்னைகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணி பாதுகாப்பு உண்டு துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்பு மிக குறைவு. அதேநேரம், அவர்களின் பணி பாதுகாப்பை மாநகராட்சி உறுதி செய்துள்ளது. ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்கள் தனியார்வசம் துாய்மை பணி ஒப்படைக்கப்பட்டாலும், அம்மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றிய 2,000 பேரை, நிபந்தனையின்றி, 750 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்த்து கொள்ள, ஒப்பந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தவிர, பி.எப்., - இ.எஸ்.ஐ., மற்றும் விபத்து காப்பீடு என, பல சலுகைகள், தற்போது வழங்கப்பட்டு உள்ளன. இதற்கான பிடித்தம் காரணமாவே, அவர்களுக்கான ஊதியம் குறைவாக தெரிகிறது. துாய்மை பணியாளர்கள் எப்போது வந்து, தனியார் நிறுவனத்தில் சேர நினைத்தாலும் கட்டுப்பாடின்றி சேர்த்து கொள்ளப்படுவர். போராட்டத்தை கைவிட்டு அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். - ஜெ.குமரகுருபரன், கமிஷனர், சென்னை மாநகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு மாதம், 22,590 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மை பணி தனியார்வசம் சென்றுள்ளதால், அவர்களுக்கு தொடர்ந்த வேலை கிடைத்தாலும் பழைபடி ஊதியம் கிடைக்காது. தனியார் நிறுவனம், 16,950 ரூபாய் என்ற அடிப்படையில்தான் பணிக்கு ஆள் எடுக்கின்றது. ஒவ்வொருவரும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய நிலையில், அவர்களுக்கான ஊதிய குறைப்பை ஏற்க முடியாது. ஆட்சிக்கு வரும்முன் பணி நிரந்தரம் எனக்கூறிய தி.மு.க., தற்போது, எங்களை அலட்சியப்படுத்துகிறது. தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தனியார் நிறுவனத்தின்கீழ் பணி என்றாலும், பழைய ஊதியம் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் வரை போராட்டம் தொடரும். - கு.பாரதி, மாநில தலைவர், உழைப்போர் உரிமை இயக்கம் 10ல் போராட்டம் சீமான் அறிவிப்பு துாய்மை பணியாளர்கள் தனியார் மயமாவதை கண்டித்தும், அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நா.த.க., தொழிற்சங்க பேரவை சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, வரும் 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும் என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஜெய்ஹிந்த்புரம்
ஆக 06, 2025 19:19

கவர்னர் இறங்கி வந்து வேலை செய்யலாமே?


V RAMASWAMY
ஆக 06, 2025 11:05

தமிழகமும் சுகாதாரச் சீர்கேடும் ஒன்றிணைந்தவை. தமிழகத்தில் உணவகங்களில் உணவருந்தினால் அல்லது தண்ணீர் எங்காவது அருந்தினாலோ வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுகின்றன. கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, குப்பைகள் கொட்டுவது, மூக்கு சிந்துவது அதனை கையாலே துடைத்து அருகிலுள்ள சுவற்றில் துடைப்பது, மல ஜலம் சிறுநீர் கழிப்பது, சுத்தம் சுகாதாரமில்ல்லா மருத்துவ மருத்துவ மனைகள், இவைகளெல்லாம் அசுத்தத்திற்கும் நோய் நொடி பரவுவதற்குமான அருவருப்பான அடையாளங்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 06, 2025 19:20

இந்தியனின் அடையாளம்


புதிய வீடியோ