ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு மூத்த வேளாண் வல்லுனர்கள் பாராட்டு
சென்னை, தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர்கள் சங்கத்தின், இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், சென்னை எழும்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. சங்கத்தின் சிறப்பு மலரை, மணிமாறன் வெளியிட, வேளாண் பேராசிரியர் அரங்கநாதன் பெற்றுக் கொண்டார். சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். மதுரை, திருநெல்வேலி, நாமக்கல் கிளை சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சங்க வரவு செலவு விவரங்களை, பொருளாளர் பாலகிருஷ்ணன், ஆண்டறிக்கையை மாநில செயலர் தயானந்தம் வாசித்தனர். கூட்டத்தில், பஹஸ்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், இந்திய ராணுவத்தின் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோரமண்டல் இன்ஜினியரிங் நிறுவன தலைவர் மணிமாறன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுடலைக்கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.கூட்டத்தில் சங்கத் தலைவர் கணேசமூர்த்தி பேசியதாவது:ஓய்வுபெற்ற வேளாண் பட்டதாரிகள் இணைந்து சங்கம் ஆரம்பித்துள்ளோம். அந்தந்த கிளை சங்கங்கள் வாயிலாக சேவை செய்கிறோம். சங்க உறுப்பினர்களின் குடும்பங்கள் மட்டுமின்றி, ஏழ்மை நிலையில் உள்ள மற்ற குடும்பத்தினரின் கல்விக்கு உதவி செய்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார். முடிவில், சங்கத்தின் சென்னை கிளை செயலர் முபாரக் பாட்சா நன்றி கூறினார்.***