உந்து நிலைய குழாய் உடைப்பால் வளசரவாக்கத்தில் தேங்கும் கழிவுநீர்
வளசரவாக்கம்:வளசரவாக்கம் மண்டலம், 152வது வார்டு கடம்பன் தெருவில், கழிவுநீர் உந்து நிலையம் அமைந்துள்ளது.இதில், 151வது வார்டில் உள்ள ஜெய் நகர், எஸ்.வி.எஸ்., நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கடம்பன் தெருவில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.கடம்பன் தெருவில் உள்ள கழிவுநீர் உந்து நிலைய குழாய் உடைப்பால், குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இதனால், வளசரவாக்கம் ஜெய் நகர், எஸ்.வி.எஸ்., நகரில், தாழ்வாக உள்ள பகுதிகளில், கழிவுநீர் சாலையில் தேங்குவதுடன், சில இடங்களில் குடியிருப்புகளில் புகுந்தன.இதையடுத்து, குடிநீர் வாரியம் சார்பில், மின் மோட்டார் வாயிலாக கழிவுநீர் அகற்றப்பட்டு வருகிறது.அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து, லாரி வாயிலாக கழிவுநீர் அகற்றப்பட்டு, 151வது வார்டு செந்தில் நகரில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்கு செல்லும் பாதையில் உள்ள பாதாள சாக்கடை மேல் மூடி வழியாக விடப்படுகிறது.எனவே, இதற்கு நிரந்தர தீர்வாக, ஜெய் நகர் மற்றும் எஸ்.வி.எஸ்., நகர் பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடையை, செந்தில் நகரில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்துடன் இணைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்., நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை, செந்தில் நகரில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.