பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
உள்ளகரம், பெருங்குடி மண்டலம், வார்டு 185க்கு உட்பட்டது உள்ளகரம். இங்குள்ள என்.எஸ்.சி.போஸ் சாலை, வேளச்சேரி- - ஆலந்துார், மடிப்பாக்கம் - கைவேலி சாலைகளை இணைக்கிறது.எனவே, இதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. சாலையின் இருபுறமும் கடைகளும், வீடுகளும் நிரம்பி உள்ளன. இதனால், இச்சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.இந்நிலையில், இதில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த நான்கு நாட்களாக, வீராங்கல் ஓடை இணைப்பு பகுதிக்கு முன், 'மேன்ஹோல்' வாயிலாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தவிர, துர்நாற்றத்தால் அப்பகுதிவாசிகள் சுவாச பிரச்னை, உணவு உண்ண இயலாமையால் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே, அடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாயை சீர்செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, 'உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.