மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று
07-Oct-2025
சென்னை: ஸ்ரீதேவி நிருத்யாலயா நடன பள்ளி சார்பில், 'சிவ நவ பக்தி' எனும் தலைப்பில், 19வது நாட்டிய நாடகம், தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று நடந்தது. இதில், சிவனை அடைய வழிவகுக்கும், 'சிவ நவ பக்தி' எனும் ஒன்பது விதமான பக்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட, நாட்டிய நாடகம் நடந்தது. ஸ்ரீதேவி நிருத்யாலயா நடன பள்ளியைச் சேர்ந்த 58 பேர், இதில் பங்கேற்று, ஒன்பது விதமான பக்தியை சிறப்பாக வெளிக்கொணர்ந்தனர். சிவன் மீதான பக்தியை போற்றும் வகையில், சிவ மஹா புராணம், தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, இந்த நாடகம் இயற்றப்பட்டு உள்ளது. இந்த நாடகத்தின் கதையை, ஷோபா எழுதியுள்ளார். நடன அமைப்பை, நடன பள்ளியின் நிறுவனர் ஷீலா உன்னிகிருஷ்ணன் அமைத்திருந்தார். எம்பார் கண்ணன் இசையில், டாக்டர் ரகுராமன் பாடல் வரிகளில், இந்நாட்டிய நாடகம் நிகழ்த்தப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்ட பக்தர்களின் நெகிழ்ச்சியான கதைகளை வைத்து, ஒவ்வொரு பக்தி முறையும் காட்சியமைக்கப்பட்டிருந்தது, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக, காரைக்கால் அம்மையாரின் கணவர் பரமதத்தன், பக்தியால் மரணத்தை வென்ற மார்க்கண்டேயன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, ரசிகர்களின் மனதை நிறைய செய்தனர். ரசிகர்களின் மனம் நிறைந்தது போலவே, அரங்கும் இறுதி வரை நிறைந்திருந்தது.
07-Oct-2025