உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துப்பாக்கி சுடுதல்: ரைபிள் பிரிவில் சென்னை போலீசார் அபாரம்

துப்பாக்கி சுடுதல்: ரைபிள் பிரிவில் சென்னை போலீசார் அபாரம்

கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில், கடந்த மூன்று நாட்களாக துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது.மாநில அளவில், ஆண் மற்றும் பெண் போலீசார் போட்டியில் பங்கேற்றனர். காவல் துறை தலைவர் ஜெயஸ்ரீ தலைமையிலும், தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் மேற்பார்வையிலும் போட்டிகள் நடந்தன.இதில், ஆண், பெண் போலீசாருக்கு தனித்தனியாக 13 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. 198 ஆண் போலீசார் ஒன்பது அணிகளாகவும், 120 பெண் போலீசார் எட்டு அணிகளாகவும் பங்கேற்றனர்.கடைசி நாளான நேற்று நடந்த ஆண் போலீசாருக்கிடையேயான ரிவால்வர், பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில், தலைமையிட அணி சாம்பியன்ஷிப் கோப்பையுடன் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்றது. ஆயுதப்படை அணி இரண்டாமிடமும், மத்திய மண்டல அணி மூன்றாமிடமும் பிடித்தன.கார்பைன், ஸ்டென் - கன் சுடும் போட்டியில், மத்திய மண்டல அணி முதலிடம் பிடித்து, சாம்பியன் கோப்பையை பெற்றது. தலைமையிட அணி இரண்டாமிடமும், தெற்கு மண்டல அணி மூன்றாமிடமும் பிடித்தன.பெண் போலீசாருக்கான ரைபிள் போட்டியில், சென்னை மாநகர காவல் அணி முதலிடம் பிடித்து 'சாம்பியன்' கோப்பையை பெற்றது. மேற்கு மண்டலம் இரண்டாமிடமும், வடக்கு மண்டலம் மூன்றாமிடமும் பிடித்தன.போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாருக்கு, கூடுதல் காவல்துறை இயக்குனர் அமல்ராஜ், பதக்கங்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !