துாய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் பற்றாக்குறை
சென்னை:மாதவரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்தில், தினமும் 3 லட்சம் கிலோவிற்கு மேல் குப்பை சேகரமாகிறது. இந்தாண்டு இறுதிக்குள் சென்னையை 'குப்பையில்லா மாநகரமாக்க' மாநகராட்சி திட்டமிட்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், துாய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.துாய்மைப் பணியாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக தமிழக அரசு துாய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தை உருவாக்கியுள்ளது.இதன் வாயிலாக விபத்து காப்பீடு, உதவித்தொகை, பிள்ளைகளுக்கு கல்வி உதவி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்படுகிறது. அதேபோல, 'வரும்முன் காப்போம்' என்ற அடிப்படையில், துாய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், சானிட்டரி, குப்பை அள்ள தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்.ஆனால், சென்னையில் பணியாற்றும் பல துாய்மைப் பணியாளர்கள் கையுறை கூட இன்றி பணிபுரிகின்றனர்.மீண்டும் கொரோனா பரவல் தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.