உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய அளவிலான நீச்சல் போட்டி எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் அசத்தல்

தேசிய அளவிலான நீச்சல் போட்டி எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் அசத்தல்

சென்னை: காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில், நேற்று துவங்கிய தேசிய நீச்சல் போட்டியில், 400-க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கான அக்வாட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, காட்டாங்கொளத்துார் பல்கலை வளாக நீச்சல் குளத்தில் நடந்தது. இதில், பல மாநிலங்களைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர். நீச்சல் போட்டிகளில், 50, 100 மீட்டர் 'ப்ரீ ஸ்டைல் மற்றும் பட்டர்பிளை' 100 மீட்டர் 'பேக் ஸ்ட்ரோக்' 100 மீட்டர் 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' 200 மீட்டர் தனிநபர் மெட்லே, 800 மீட்டர் 'ப்ரீ ஸ்டைல்' ஆகிய பிரிவுகள் இடம்பெற்றன. டைவிங் போட்டிகளில், ஒன்று மற்றும் 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டு, ஹை போர்டு டைவிங் ஆகியவையும், பாரா மாணவர்களுக்கான 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகளும் நடந்தன. கல்லுாரி மாணவர்களுக்கான 800 மீட்டர் 'ப்ரீ ஸ்டைல்' பிரிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் கவின்ராஜ், போட்டி துாரத்தை 9.01.81 நிமிடத்தில் கடந்து, முதல் இடத்தை பிடித்தார். கல்லுாரி மாணவியருக்கான 800 மீட்டர் 'ப்ரீ ஸ்டைல்' பிரிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வீராங்கனை பவித்ராஸ்ரீ, போட்டி துாரத்தை 11.53.64 நிமிடத்தில் கடந்து, முதல் இடத்தை பிடித்தார். பள்ளி சூப்பர் சீனியர் மாணவர்களுக்கான 800 மீ., 'ப்ரீ ஸ்டைல்' பிரிவில், ராமாபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் அத்வைத், போட்டி துாரத்தை, 10.31.26 நிமிடத்தில் கடந்து, முதலிடம் பிடித்தார். மாணவியர் பிரிவில், டி.ஏ.வி., பள்ளியின் சவுஜன்யா, போட்டி துாரத்தை 10.29.26 நிமிடத்தில் கடந்து, முதலிடம் பிடித்தார். அண்ணா பல்கலையின் மண்டலங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில், பெண்கள் தனிநபர் பிரிவில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கல்லுாரி மாணவி படாலா தோனிகா, 800 மீ., 'ப்ரீஸ்டைல்' பிரிவில் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். அதேபோல், 400 மீ., 'ப்ரீஸ்டைல்' பிரிவில் வெள்ளியும், 100 மற்றும் 200 மீ., 'பேக்ஸ்ட்ரோக்' பிரிவுகளில் தலா ஒரு வெண்கலமும் வென்றார். இந்த வெற்றியால், பெண்கள் தனிநபர் பிரிவில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !