எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணி மண்டல கால்பந்தில் முதலிடம்
சென்னை, அண்ணா பல்கலையின் மண்டல கால்பந்து போட்டியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை கல்லுாரி அணி, முதலிடத்தை தட்டிச் சென்றது. அண்ணா பல்கலையின், நான்காவது மண்டலத்திற்கான கால்பந்து போட்டி, தாம்பரம் அடுத்த படப்பையில் உள்ள தானிஷ் அகமது பொறியியல் கல்லுாரியில், நேற்று முன்தினம் துவங்கி, நேற்று நிறைவடைந்தது. போட்டியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை, தாகூர், சாய்ராம் பொறியியல், சாய்ராம் தொழில்நுட்ப கல்லுாரி, எம்.ஐ.டி., உட்பட 12 அணிகள், 'நாக் அவுட்' முறையில் மோதின. முதல் அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை, 2 - 0 என்ற கோல் கணக்கில், தாகூர் பொறியியல் கல்லுாரியை தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில், சாய்ராம் தொழில்நுட்ப அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில் சாய்ராம் பொறியியல் கல்லுாரியை வீழ்த்தி, இறுதி போட்டிக்குள் நுழைந்தது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை மற்றும் சாய்ராம் தொழில்நுட்ப அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0 - 0 என்ற கணக்கில் ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. இதையடுத்து 'டை பிரேக்' ஆட்டத்தில், 3 - 2 என்ற கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணி வெற்றி பெற்று, முதலிடத்தை தட்டிச்சென்றது.