உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்பத்துாரில் ம.பி., வாலிபர்கள் அட்டகாசம்; தடுக்க சென்ற எஸ்.ஐ., உட்பட 4 பேர் மீது கல்வீச்சு

அம்பத்துாரில் ம.பி., வாலிபர்கள் அட்டகாசம்; தடுக்க சென்ற எஸ்.ஐ., உட்பட 4 பேர் மீது கல்வீச்சு

அம்பத்துார்;அம்பத்துாரில் அட்டகாசத்தில் ஈடுபட்ட ம.பி., வாலிபர்களை தடுக்க சென்ற எஸ்.ஐ., உட்பட நான்கு பேர் மீது கல் வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்துார், அத்திப்பட்டு, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன், 34. இவரது வீட்டின் கீழ் தளத்தில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் சிங், 24, சந்தீப் சிங், 22, சந்தீப் சிங், 20, மணிஷ் சிங், 20, மணிஷ் சிங், 25 மற்றும் இரண்டு சிறுவர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர். இவர்கள், அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஏழு பேரும், மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியும், அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த தாமோதரனை, ஏழு பெரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின்படி, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, உதவி ஆய்வாளர் சண்முகம், 50, அட்டகாசத்தில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்களை தடுக்க சென்றார். அதீத மது போதையில் இருந்த அவர்கள், அங்கிருந்த கற்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து, உதவி ஆய்வாளர் சண்முகம், வீட்டின் உரிமையாளர் தாமோதரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரபு, 42 மற்றும் முதியவர் தேவேந்திரன், 65, ஆகியோர் மீது வீசி, தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், உதவி ஆய்வாளர் சண்முகம் பலத்த காயமடைந்தார். மற்றவர்களுக்கும் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நான்கு பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தகவலறிந்து, உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனால் பயந்த வடமாநில வாலிபர்கள், வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு வெளியே வராமல், போலீசாருக்கு அரை மணி நேரமாக 'டிமிக்கி' கொடுத்தனர். பின், அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் வந்து அழைத்ததை அடுத்து, அவர்கள் வெளியே வந்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின், ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !